Featureகட்டுரைகள்

எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும்!

நடிகர் ரஜனிகாந்த் தனது சொந்த கருத்தாகவோ அல்லது பிறர் தூண்டுதலின் பேரிலோ
1971ஆம் ஆண்டு பெரியாரின் கட்சியால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த இறைமறுப்பு ஊர்வலம்
பற்றி கூறியது தேன்கூட்டில் கல்லெறிந்ததுபோல் ஆகிவிட்டது.

பெரியாரைபற்றி பேசும்முன், எழுதும்முன் அவரைப்பற்றி ஓரளவாவது தெரிந்து கொள்ள
வேண்டும். பெரும்பாலானோர் அவரது இறைமறுப்பு ஒன்றை மட்டும் கண்ணருகே வைத்து
பார்ப்பார்களேயன்றி அவர் எத்தகைய சமூக தீர்திருத்தவாதி என்பதை பார்க்காமலே தமது
கருத்துகளையெல்லாம் கூறிவிடுவார்கள். இந்த மண்ணில் எவருமே நூற்றுக்கு நூறு
நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ கிடையாது. அதனால்தான் குணம் நாடி குற்றம்
நாடி அவற்றுள் மிகைநாடச் சொன்னான் வள்ளுவன். அப்படி மிகைநாடினால் பெரியாரை
இறைமறுப்புவாதி என்பதற்கும் மேலாக ஒரு சமூக சீர்திருத்தவாதி என்றே அடையாளப்
படுத்தலாம்.

இப்போது பிரச்சினை என்னவென்றால் திராவிடர் கழகத்தினர் சொல்வது உண்மையா?
அல்லது ரஜனிகாந்த் சொல்வது உண்மையா? என்பதே. இதற்கு அன்று சேலம் ஊர்வலத்தில்
என்ன நடந்தது என்பது முழுமையாகத் தெரிந்தவர்களால்தான் பதிலைச் சொல்லமுடியும்.
பெரியாரோடு தொடர்புடையவர்கள் சொன்னால் அவர்கள் திராவிடர் கழகம் நடத்திய
ஊர்வலத்துக்கு சார்பாகவே சொல்வார்கள். ஆதலால் பெரியாரோடு சம்பந்தப்படாதவர்கள்
சொல்லும் கூற்றையே நாம் கணக்கில் கொள்ளவேண்டும். அந்த வகையில் ஊர்வலத்தைப்
பற்றி இந்து பத்திரிகையில் அதன் சேலம் நிருபர் என்ன சொல்லியிருக்கிறார் என்பதைப்
பார்ப்போம்.

ஜனவரி 24, 1971ல் வெளிவந்த இந்து இதழ், இதுபற்றி “ஆபாச அட்டைப்படங்களோடு ஆர்ப்பாட்டம்”
என்ற தலைப்பில் விவரமாக செய்தி வெளியிட்டிருந்தது. அச்செய்தியில் புராணக் கடவுளைச்
சித்தரிக்கும் ஆபாசப் படங்களுடன் முருகக்கடவுள் பிறப்பைக்குறிக்கும் படங்களும் முனிவர்களின்
தவம் மற்றும் மோகினி அவதாரம் போன்றவற்றை குறிக்கும் படங்களையும் ஊர்வலத்தில் எடுத்து
சென்றதாகவும் இருந்தது. இதுதவிர பத்தடி உயர இராமர் உருவத்தை ஒரு வாகனத்தில் வைத்து
செருப்பால் அடித்தபடியே சென்றுள்ளனர் என்றும் ஊர்வலத்தின் இறுதியில் தந்தை பெரியார் ஒரு
டிராக்டரில் அமர்ந்து வந்ததாகவும் மரத்தில் வடிவமைக்கப்பட்ட இராமரின் உருவம் ஊர்வலத்தின்
முடிவில் போஸ் மைதனத்தில் தீவைத்து எரிக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் குறிப்பிட்டிருந்த
நிருபர் அந்த உருவங்கள் எதைப்பற்றியும் நிர்வாணமாக இருந்ததாக குறிப்பிடவேயில்லை.

இச்சம்பவம் நடக்கும்போது சேலத்தில் இந்து பத்திரிகையின் ஒரே நிருபரைத்தவிர வேறு
ஆங்கிலப் பத்திரிகைகளுக்கு நிருபர் யாரும் கிடையாது. மேலும் பிப்ரவரி 15, 1971 வெளிவந்த
துக்ளக் இதழ் ஊர்வலத்தின் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது. அப்போது முதல்வராயிருந்த
முதல்வர் கருணாநிதியின் தி.மு.க. அரசு அந்த இதழ்களை எல்லாம் பறிமுதல்செய்து வெளிவராது
தடுத்தது. இதை மேற்கோளாக காட்டி மாநில அரசு எவ்வாறெல்லாம் பத்திரிகை சுதந்திரத்தை
தடுக்கிறது என்பதற்கு உதாரணமாக எத்தனையோ சான்றுகளில் இது ஒன்று என்று 2017ல் ஒரு
ஆங்கில இதழ் செய்தி வெளியிட்டது. இந்த செய்தியின் நகலைத்தான் பத்திரிகையாளர் சந்திப்பில்
நடிகர் ரஜனிகாந்த் காண்பித்து மன்னிப்பு கேட்க மறுத்துவிட்டார்.

எதிர்த்துப்பேச திரணியற்று பி.ஜே.பி. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.இ.அ.தி.மு.கவில் ஓ.பன்னீர்
செல்வம், டி.ஜெயகுமர் போன்ற மந்திரிகளும் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியும் தேசிய முற்போக்கு
திராவிட கழகமும் ரஜனிகாந்தை வன்மையாக கண்டித்திருக்கிறார்கள். பி.ஜே.பி. க்கு நன்றாகவே
தெரியும் அவர்களுக்கு தமிழகத்தில் சவாலாக தி.மு.க. இருக்கிறது என்று. எனவே தி.மு.க.வை
இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று காண்பித்து மக்களிடமிருந்து அக்கட்சியை அப்புறப்படுத்துவதே
பி.ஜே.பியின் திட்டமாகும். ஆனால் இந்த ஒரு கருத்தைமட்டும் சொல்லி தி.மு.க.வை தமிழகத்தில்
இருந்து அப்புறப்படுத்திவிட முடியாது. ஏனென்றால் ஆன்மிகத்தை முற்றாக எதிர்த்து அரசியலில்
வெற்றிபெறமுடியாது என்பதை நன்றாகவே உணர்ந்திருந்த பேரறிஞர் அண்ணா “ஒன்றே குலம்
ஒருவனே தேவன்” என்று கொள்கையில் சமரசம் செய்து திராவிடர் கழகத்தின் சித்தாந்தத்தில் இருந்து
வெளிவந்தவர் என்பதை மறந்துவிடக் கூடியவர்கள் அல்ல தமிழ்நாட்டினர்.

அடுத்து, பெரியாரை அவமதிக்கும் வகையில் 2019ல் அவரது நினைவு நாளன்று பி.ஜே.பி. அவரது சொந்த
வாழ்க்கையைப்பற்றி அவதூறாக ட்விட் செய்திருந்தது. அதைத்தொடர்ந்து தமிழகத்தில் ஏற்பட்ட
பேரெழுச்சியால் உடனே அதை நீக்கியது. இந்த சமயத்தில் பி.ஜே.பி. க்கு அவர்களது திட்டத்தை செயல்
படுத்தி தி.மு.க.வின் பெயரைக்கெடுத்து அவர்களை தமிழரின் எரிகளாக காட்ட மக்களால் நன்கறியப்பட்ட
ஒரு பிரபலம் தேவைப்பட்டது. பி.ஜே.பி.க்கு நடிகர் ரஜனிகாந்த் தேவை ரஜனிகாந்துக்கு பி.ஜே.பி. தேவை
என்பதால் இப்போது எனக்கும் திருவள்ளுவருக்கும் காவிச்சாயம் பூசமுடையாது என்று சொன்னவர்
பி.ஜே.பி. க்கு துணைபோய்விட்டார்.

துக்ளக் ஆண்டுவிழாவில் பேசிய அவர் ராமச்சந்திரமூர்த்தியையும் சீதாவையும் ஆடை ஏதுமின்றி
காட்டினார்கள் என்று கூறியிருக்கிறார். முரசொலி வைதிருப்பவர்களை தி.மு.க.வினர் என்றும் துக்ளக்
வைத்திருப்பவர்களை அறிவாளிகள் என்றுகூறி வீண்வம்பில் மாட்டியுள்ளார். ஆனால் திரு. மு. க. ஸ்டாலின்
மிகவும் சாதுர்யமாக இந்த பிரச்சினையை கையாண்டிருக்கிறார்.

பெரியாரின் இறைமறுப்பு கொள்கையை ஒதுக்கிவிட்டு அவர் சமூகத்தில் புரையோடிப்போயிருந்த
எத்தனையோ சீர்கேடுகளை ஒழிக்க எவ்வாறெல்லாம் போராடினார் என்பதையும் அதனால் தமிழகம்
அடைந்த மறுமலர்ச்சியையும் அறிந்தவர்கள் அவரைப்பற்றி பேசவும் எழுதவும் சற்று தயங்குவார்கள்.
சிறந்த ஆன்மிகவாதியாயிருந்த திரு. ராஜஜியுடனேயே சிறந்த நட்பை பாராட்டினார் என்ற ஒன்றே போதும்
அவர் எத்தகையவர் என்றுகூற. பெரிய செல்வந்தனாக இருந்தவர் மிகவும் ஆடம்பரமாக வாழ்ந்துவிட்டு
போயிருக்கலாம். ஆனால் அவர் அப்படி வாழ்ந்துவிட்டுச் செல்லவில்லை. போராட்டத்தையே பெரும்பாலும்
தழுவினார். அதனால்தான் பெரியாரைப்பற்றியோ அல்லது அவரது சித்தாந்தத்தைப்பற்றியோ கடவுள்
நம்பிக்கையுடைய புரட்சித்தலைவர் எம். ஜி. ராமச்சந்திரன், புரட்சித்தலைவி ஜெயலலிதா உட்பட
தமிழ்நாட்டின் எந்த தலைவருக்கும் பேச துணிவு இருந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

-சங்கர சுப்பிரமணியன்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button