சிங்களக் குடியேற்றத் திட்டங்களுக்கான முன்மொழிவுகள்; யாழ்.மாவட்டத்தில் திட்டமிட்ட இன அழிப்புச் செயற்பாடுகள்; கஜேந்திரகுமார் கடும் குற்றச்சாட்டு

வடக்கு , கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதும் திட்டமிட்ட வகையிலான இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறுகின்றன.அரசியல் பிரமுகர்களும் சிவில் மக்களும் பல்வேறு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர். 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு எதுவும் வழங்கப்படவில்லை.
இருப்பதை இல்லாதொழிக்கும் யோசனைகள்,தமிழர்களின் இனவிகிதாசரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றத்திட்டங்களுக்கான முன்மொழிவுகளே முன்வைக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம்சாட்டினார்
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 6ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குற்றம்சாட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் பேசுகையில்,
தமிழின விடுதலைக்காக உயிர்கொடுத்த உறவுகளை நினைவு கூரும் மாதம் இந்த கார்த்திகை மாதம் . மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய வீரர்கள் தினமும் இந்த மாதம் அனுஸ்டிக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் கடந்த வாரம் அந்த நிகழ்வு இடம்பெற்றது. உயிரிழந்த உறவுகளை நினைவுக்கூரும் உரிமை அனைவருக்கும் உண்டு. அது அவரவர் அடிப்படை உரிமை .மக்கள் விடுதலை முன்னணியின் ஆயுத போராட்டத்தால் பலர் கொல்லப்பட்டார்கள். அவர்களின் போராட்டத்தை பயங்கரவாதம் என்று கொச்சைப்படுத்தி அப்போதைய அரசாங்கம் மக்கள் விடுதலை முன்னணியை தடை செய்தது. ஆனால் இன்று அந்த அமைப்பின் உறுப்பினர்கள் சட்டபூர்வமான வகையில் நினைவு கூரப்படுகின்றார்கள்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் உரிமை மற்றும் சுய நிர்ணயத்துக்காக ஆயுமமேந்தி போராடி உயிர்நீத்தவர்களை நினைவுக்கூரும் உரிமை எமக்கும் உண்டு.இந்த உரிமை தமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் மற்றும் அக்கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளர்கள் முதல் பெண் போராளி மாவீரரான மாலதியை நினைவு கூர்ந்த நிகழ்வில் கலந்துக் கொண்டதற்காக பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள்.
வடக்கு , கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதும் திட்டமிட்ட வகையிலான இன அழிப்புச் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது.கடந்த அரசாங்கம் இனவாதத்துடன் செயற்பட்டதாகக் குற்றம் சாட்டிவிட்டு, தாங்கள் இனவாதமாகச் செயற்படவில்லை எனக் கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கமும் அதே பின்னணியிலேயே செயற்படுகிறது என்பது பல விடயங்களில் தெளிவாகப் புலப்படுகின்றது.
யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூருவதற்கு எவ்விதத் தடையுமில்லை எனவும்,அது மக்களின் உரிமை எனவும் சர்வதேச சமூகத்திற்குக் குறிப்பிடும் அரசாங்கம், நடைமுறையில் அதற்கு முரணாகவே செயற்படுகிறது. நினைவேந்தல் நடவடிக்கைகளுக்குப் பொலிஸாரால் தொடர்ச்சியாக இடையூறுகள் விளைவிக்கப்படுவதுடன், அரசியல் பிரமுகர்களும் சிவில் மக்களும் பல்வேறு விசாரணைகளுக்காக அழைக்கப்பட்டு அச்சுறுத்தப்படுகின்றனர்.
அரசாங்கம் உண்மையிலேயே நேர்மையாகச் செயற்படுவதாக இருந்தால், இவ்வாறான முறையற்ற செயற்பாடுகளில் ஈடுபடுவோருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டில் ஒரு தரப்பினர் மாத்திரம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில், எவ்வாறு உண்மையான இன நல்லிணக்கம் உருவாகும் என்பதைப் பற்றி அரசாங்கம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி மற்றும் மன்னார் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பொது வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தின் பொறுப்பின் கீழ் கொண்டு வருவதாகவும், இந்தத் தீர்மானத்தை மக்கள் விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.
தமக்கான போதிய வசதிகள் இல்லாத பட்சத்தில் மாற்று வழிகளைத் தேடுவது இயல்பானதாகும். மாகாண மட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் போதுமான வசதிகள் இல்லாவிடின், அதனை மத்திய அரசு பொறுப்பேற்கும் போது மக்கள் அதற்கு விருப்பம் தெரிவிப்பது இயல்பானதே. ஆனால், மாகாண சபைகளுக்குப் போதுமான நிதியை ஒதுக்கி உரிய வசதிகளை வழங்கினால் இவ்வாறான பிரச்சினைகள் எதுவும் ஏற்படாது.
கடந்த அரசாங்கங்களைப் போலவே தற்போதைய அரசாங்கமும் மாகாண சபைகளை முடக்கும் வகையிலேயே செயற்படுகிறது. மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள சொற்ப அதிகாரங்களையும் மத்திய அரசின் கீழ் கொண்டுவரும் வகையிலேயே இதன் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ஏனைய மாகாண சபைகளைக் விடவும் வடக்கு மாகாண சபையின் கட்டமைப்பைப் பலவீனப்படுத்துவதில் அரசாங்கங்கள் அதிக கவனம் செலுத்துகின்றன. வடக்கு மாகாண சபை பெரும்பான்மை சமூகத்தின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதை ஆட்சியில் உள்ள சகல அரசாங்கங்களும் நன்கு அறிந்துள்ளமையே இதற்குப் பிரதான காரணம்.
மாகாண சபைகளுக்குப் போதுமான நிதியை வழங்காமல் அங்குள்ள நிர்வாகக் கட்டமைப்பைப் பலவீனப்படுத்திவிட்டு, பின்னர் அவற்றை மத்திய அரசின் பொறுப்பின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்கும் போது அதனை மக்கள் விரும்புகிறார்கள் என்று குறிப்பிடுவது எவ்வகையில் நியாயமானது?
யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் பொறுப்பெடுக்க உள்ளதாக குறிப்பிடப்படுவது. ஆனால் அண்மையில் அந்த வைத்தியசாலைக்கு 180 தாதிய நியமனங்கள் வழங்கப்பட்டன. அந்த நியமனங்கள் வழங்கப்பட்டு ஒரு சில நாட்களில் 103 நியமனங்கள் பிறதொரு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன. தற்போதும் அங்கு 105 வெற்றிடங்கள் காணப்படுகின்றன. இதுதான் உண்மை. அந்த வைத்தியசாலையில் அடிப்படை மருத்துவ வசதிகள் கூட இல்லை. இது முற்றிலும் வெட்கக்கேடானது.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு வைத்தியசாலைகளில் கூட போதுமான வசதிகள் இல்லாமல் நெருக்கடி நிலையே காணப்படுகின்றன. பல்வேறு நெருக்கடியின் மத்தியில் தான் யாழ்ப்பாணம் பொது வைத்தியசாலையின் சேவையாளர்கள் இன்றும் சேவையாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் மல்வத்து ஓயா திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிவுல் ஓயா திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டுக்காகன வரவு செலவுத் திட்டத்தில் மாதுறுஓயா திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் உள்ள அரசியல் நடவடிக்கைகளை முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் இந்த மாதுறு ஓயா திட்டம் அறிவிக்கப்பட்ட உடனே அந்த திட்டத்தின் பயன் அநுராதபுரம் பகுதியில் வாழ்ந்த பெரும்பான்மை மக்களுக்கு மாற்றியமைக்கப்பட்டது.
மன்னார் மாவட்டத்துக்காக அறிமுகப்படுத்தப்பட்ட கீழ் மல்வத்துஓயா திட்டத்தில் உள்வாங்கப்பட்ட குடிநீர்த்திட்டம் தற்போது அநுராதபுரம் மாவட்டத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தான் உண்மை கடந்த அரசாங்கம் முன்மொழிந்த கிவுல் ஓயா திட்டத்துக்கு கடும் எதிர்ப்புகள் தோற்றம் பெற்றதை தொடர்ந்து அந்த திட்டம் நிறுத்தப்பட்டது. ஆனால் இந்த அரசாங்கம் தமிழ் மக்களின் எதிர்ப்பை கருத்திற் கொள்ளாமல் கிவுல் ஓயா திட்டத்தை அமுல்படுத்த உறுதியாகவே உள்ளது.இது முற்றிலும் தவறானது.
2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு என்று எதுவும் வழங்கப்படவில்லை. இருப்பதை இல்லாதொழிக்கும் யோசனைகள் மாத்திரமே முன்வைக்கப்பட்டுள்ளன. யுத்தத்தால் இடம்பெயர்ந்து , சொந்த நிலங்களை விட்டு அலைந்து திரியும் மக்களுக்கான குடியேற்ற திட்டங்கள் உள்வாங்கப்படவில்லை. மாறாக தமிழர்களின் இனவிகிதாசரத்தை அழிக்கும் சிங்கள குடியேற்றத்திட்டங்களுக்கான முன்மொழிவுகள் மறைமுகமாக முன்வைக்கப்பட்டுள்ளன. ஆகவே தமிழ் மக்களின் நலன் களை விரும்பும் மக்கள் பிரதிநிதிகள் இந்த வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்றார்.
![]()