இந்த அரசும் ஏமாற்றுகிறது தமிழர்களின் எதிர்கால இருப்பு கேள்விக்குறி; சிறிநாத் கவலை

இந்த அரசாங்கம் 2வருடங்களை கடந்துள்ள போதும் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் கூறவில்லை. நம்பிக்கை,நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை
கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.மாகாண சபைகள் அதிகாரங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் நடவடிக்கைகளுக்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை.இந்த அரசாங்கத்தில் சமமான நீதியென்ற விடயம் கேள்விக்குரியதாக இருக்கின்றது. இது சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு தொடர்பான கேள்விகுறியாக இருக்கின்றது என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இடம் பெற்ற 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான 6ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த சிறிநாத் எம்.பி மேலும் பேசுகையில்,
இந்த கார்த்திகை மாதம் மாவீரர் தினம் வருகின்றது . மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தமது இன்னுயிரை நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலியை செலுத்திக்கொண்டும் மற்றும் அண்மையில் காலமான தமிழ்த் தேசிய பற்றாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கும் அஞ்சலியை செலுத்துகின்றோம்.
வரவு செலவுத் திட்டம் என்பது எண்களையோ, கணக்குகளையோ, திட்டங்களையோ மட்டும் முதன்மைப்படுத்தியதாக அல்லாமல் நாட்டில் வாழும் மக்களின் வாழ்க்கை, நம்பிக்கை, வாழ்வதற்கான சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாக பார்க்கப்பட வேண்டும். நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் நாட்டை கட்டியெழுப்பவும், மத்திய கிழக்கில் நிலவும் நெருக்கடியான புவிசார் அரசியல் சூழ்நிலையில் இந்த அரசாங்கம் பல விடயங்களை முன்வைத்துள்ளதுடன், அவற்றை நடைமுறைப்படுத்த முயல்கின்றது.
எவ்வாறாயினும் வடக்கு, கிழக்கில் 13,000 குடும்பங்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டம் வரவேற்கத்தக்கது. கிளிநொச்சி, யாழ்ப்பாணத்திற்கான குடிநீர் திட்டம், பேசாலை துறைமுகத்திற்கான நிதி ஒதுக்கீடு, குறிஞ்சாகேணி உப்பளத்தை மீள் அமைப்பதற்கான திட்டம், மட்டக்களப்பு போதானா வைத்தியசாலைக்கான அபிவிருத்தி, பாலங்கள் அமைக்கும் திட்டம், வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்திற்கான முயற்சி போன்ற நல்ல விடயங்களை முன்வைத்துள்ள போதும், பல விடயங்கள் பல நெருக்கடிகளை ஏற்படுத்துவதாகவே உள்ளன.
மக்களுக்கான மானிய திட்டங்கள் உற்பத்தி துறையை ஊக்குவிப்பதற்கான முதலீடுகளை கொண்டு செல்ல வேண்டிய பாரிய பொறுப்பு இருந்த போதும், மக்களுக்கான மானியங்களை வழங்குவதில் குறைபாடுகள் நிலவுகின்றன. அத்துடன் மக்களுக்கு சம்பளத்தை வழங்கும் முறைகளில் பல நெருக்கடிகளை காணக்கூடியதாக உள்ளது. ஒரு கையால் கொடுத்து மறு கையால் பெறுவது போன்று இருக்கின்றது.
இதேவேளை இந்த அரசாங்கத்திற்கு வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நம்பிக்கையுடன் வாக்களித்திருந்தனர். அந்த வகையில் அந்த பகுதிகளுக்கு பல திட்டங்களை நீங்கள் முன்மொழிந்திருந்த போதும், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் தாமதங்கள் இருக்கின்றன. இதனால் நம்பிக்கையீனம் ஏற்பட்டுள்ளது. ஒதுக்கப்படும் நிதி மூலங்கள் தொடர்ச்சியாக பயன்படுத்தப்படும் என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லாமையினால் அவை திறைசேரிக்கு திரும்பச் சென்றுவிடுமா? என்ற சந்தேகங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறான திட்டங்களை கண்காணிப்பதற்கு போதுமான பொறிமுறை அமைக்கப்படவில்லை.
நாட்டில் வாழும் மக்களின் எதிர்கால நிச்சயத் தன்மை என்பது வரவு செலவுத் திட்டத்தில் பொருளாதார உரிமைகளில் மட்டும் தங்கியதாக இல்லை. அவர்களின் வாழ்வியல் கலாசாரம், அரசியல் உரிமைகளை தாங்கியதாகவே நாட்டு மக்களின் எதிர்கால நிச்சயத் தன்மை உள்ளது. வடக்கு, கிழக்கு மாவட்டங்களில் தமிழ் மக்கள் கல்வி கற்ற பின்னர் நாட்டைவிட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதற்கான காரணம் என்னவென ஆராயப்பட வேண்டும். அந்த விடயங்கள் வரவு செலவுத் திட்டத்தில் பின்னடைவான விடயமாக இருக்கின்றது.
இந்த அரசாங்கம் 2வருடங்களை கடந்துள்ள போதும் அரசியல் தீர்வுக்கான எந்த முன்மொழிவுகளையும் கூறவில்லை. அத்துடன் நம்பிக்கை,நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மக்களுக்கான நியாயம் வழங்குதல் மற்றும் கடந்த கால யுத்த நெருக்கடிகளில் மக்கள் படுகொலை செய்யப்பட்டமைக்கான நீதி பொறுப்புகளை கூறுவதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள் இந்த வரவு செலவுத் திட்டத்தில் இல்லை.
இதேவேளை மாகாண சபைகள் அதிகாரங்கள் மற்றும் மாகாண சபைகள் தேர்தல் நடவடிக்கைகளுக்கூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படவில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் உங்களை நம்பி வாக்களித்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கான அரசியல் இருப்புக்கான எதிர்காலம் தொடர்பில் இந்த வரவு செலவுத் திட்டத்தில் என்ன விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது?. கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள் தேர்தல் தொடர்பில் குறிப்பிடப்பட்டிருந்த போதும், அந்த விடயங்களைகூட இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட வில்லை.
ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் ஒவ்வொரு எண்ணக்கருக்கள் அல்லது கொள்கைகள் இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக ஒருநாட்டில் அதிகார பங்கீடும், அந்த மக்கள் நம்பிக்கையுடன் வாழ்வதற்குமான ஒருமைப்பாடு இங்கு கூறப்பட்டிருக்க வேண்டும். எல்லா மக்களும் சமமானவர்கள் அவர்களுக்கு எல்லா விடயங்களும் கொடுக்கப்பட வேண்டும் என்றாலும் ஒவ்வொரு பிரதேசங்களிலும் பல நெருக்கடிகள் உள்ளன. பிரதேசத்திற்கு பிரதேசம் வித்தியாசமானது.
எல்லோருக்கும் சமமான நீதி தொடர்பில் கூறினாலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு மாதவனையில் இடம்பெறும் நெருக்கடியை கவனமாக பார்க்க வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அகற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள போதும், அவர்கள் அந்த நிலத்தை ஆக்கிரமித்து அங்கு விவசாயம் செய்கின்றனர். அங்கு வதைக்கப்படும் பசுக்களின் உரிமையாளர்களுக்கு பொலிஸில் முறையிட முடியாத நிலைமையே உள்ளது. இங்கு சமமான நீதியென்ற விடயம் கேள்விக்குரியதாக இருக்கின்றது. இவ்வாறான விடயங்கள் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் எதிர்கால இருப்பு தொடர்பான கேள்விகுறியாக இருக்கின்றது.
எவ்வாறாயினும் சில விடயங்களில் அரசாங்கம் எடுக்கும் முடிவுகளை வரவேற்கின்றோம் குறிப்பாக அனோஜன் விடயத்தில் அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைகளை நாங்கள் வரவேற்கின்றோம்.எனினும் திருகோணமலையில் கோணேஸ்வர கட்டுமானத்தை முன்னெடுப்பதில் பல இடர்பாடுகள் உள்ளன. நாங்கள் தொல்லியல் திணைக்களத்தை எதிர்க்கவில்லை. ஆனால் தொல்லியல் என்ற போர்வையில் மத சுதந்திரம் பறிக்கப்படுவதனை, பாதிக்கப்படுவதை எதிர்க்கின்றோம்.
இவ்வாறான சூழ்நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலையில், மக்கள் தாம் வாழ்வதற்கான உறுதிப் பாடற்ற நிலையில் நாங்கள் பொருளாதார நலன்களை மட்டும் வைத்துக்கொண்டு இந்த வரவு செலவுத் திட்டத்தை ஏற்றுக்கொள்வதென்பது மிகவும் சவாலான விடயம் . அரசாங்கத்தின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு நாங்கள் வலுசேர்க்க முற்படும் அதேவேளை தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டிய தேவையுள்ளது. இது தொடர்பான உத்தரவாதங்களை வழங்குமாறு ஜனாதிபதியை சந்திக்கும் போது கோரவுள்ளோம். சந்திப்புக்கு பின்னர் பல விடயங்களை கலந்தாலோசித்து முடிவுகளை எடுப்போம் என்றார்.
![]()