ஒரு குடும்பத்தையே அழித்த தீ: கொழும்பில் பெரும் சோகம்

கொழும்பு, கடுவெல நகரில் மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையமொன்றில் இன்று (19) காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 35 வயதுடைய தந்தை, 30 வயதுடைய தாய் மற்றும் இரண்டு, ஐந்து வயதுடைய அவர்களது இரு மகள்களும் அடங்குகின்றனர்.
இரண்டு மாடிக் கட்டடத்தின் கீழ் மாடியில் மின்சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம் இயங்கி வந்த நிலையில், மேல் மாடியில் குறித்த குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்த கோட்டை தீயணைப்புப் பிரிவிலிருந்து மூன்று தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டிருந்தன.
தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து எரிகாயங்களுக்கு உள்ளாகி இருந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றாலும் அவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
மின் கசிவு காரணமாக தீ ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், விபத்துக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
குறித்த வர்த்தக நிலையத்தில் அவசர வெளியேறும் கதவு (Emergency Exit) வசதி இருக்கவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
![]()