இலங்கை

சிறைச்சாலையின் சுவர்களாலும் எங்கள் பாசத்தை பிரிக்க முடியாது: தந்தைக்கு நாமல் உருக்கமான வாழ்த்து

தனது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்சவுக்கு, அவரது பிறந்தநாளை முன்னிட்டு நாமல் ராஜபக்ச உருக்கமான வாழ்த்துச் செய்தியொன்றை வெளியிட்டுள்ளார். தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குடும்பத்தினருடனும் அன்புக்குரியவர்களுடனும் இணைந்து தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட முடியாத கடினமான சூழ்நிலையில் இருந்தாலும், சிறைச்சாலையின் சுவர்களுக்கு அப்பாலும் தந்தையின் மீதான தனது அன்பும் மரியாதையும் அளவற்றதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

வாழ்க்கையில் நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத சவால்களை எதிர்கொள்ளும்போது, பெற்றோரிடமிருந்து கிடைத்த அன்பு, முன்மாதிரி மற்றும் வாழ்க்கைப் பாடங்களே எமக்கு வலிமை அளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைமைத்துவம் என்பது ஒரு பதவியை வகிப்பது மாத்திரமல்ல என்பதைத் தனது தந்தை தமக்குக் கற்றுக்கொடுத்ததாகத் தெரிவித்துள்ள நாமல், பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதும், சவால்களுக்கு மத்தியில் தளராது நிற்பதும், தான் நம்பும் கொள்கைகளுக்காகத் துணிச்சலுடன் குரல் கொடுப்பதுமே உண்மையான தலைமைத்துவம் என்பதைத் தந்தையின் வாழ்க்கை மூலம் கற்றுக்கொண்டதாகக் கூறியுள்ளார்.

இலங்கை வரலாற்றின் இருண்ட காலகட்டத்தில், நாட்டின் ஆயிரக்கணக்கான தாய்மார்கள், தந்தைகள் மற்றும் பிள்ளைகளுக்காக எவருக்கும் அஞ்சாமல் அமைதியை ஏற்படுத்திய துணிச்சலான தலைவர் தனது தந்தை எனவும் அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

அதற்காகத் தனது தந்தை ஏற்றுக்கொண்ட பொறுப்புகள், செய்த தியாகங்கள் மற்றும் எதிர்கொண்ட சவால்கள் குறித்து ஒரு மகனாகத் தான் நெருக்கமாக அறிந்திருப்பதாகவும் நாமல் தெரிவித்துள்ளார்.

தற்போது தான் எதிர்கொள்ளும் கடினமான காலகட்டத்தில், தனது தந்தை கற்றுக்கொடுத்த பொறுமை, துணிச்சல் மற்றும் உறுதியான மனநிலையின் முக்கியத்துவத்தை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு தந்தையின் மனவலிமை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதையும், தனது பிள்ளைகள் மீதான அளவற்ற பாசத்தை இதயத்தில் சுமந்துகொண்டு, ஒட்டுமொத்த நாட்டின் பிள்ளைகளுக்கும் தந்தையாக விளங்குவது எவ்வாறு என்பதையும் தனது தந்தையிடமிருந்தே கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், உண்மைக்காகப் போராடும் தானும் ஒரு தந்தை எனக் குறிப்பிட்டுள்ள நாமல், இன்று தன்னால் தந்தையின் அருகில் இருக்க முடியாவிட்டாலும், தனது பிள்ளைகள் தாத்தாவின் அருகில் இருப்பார்கள் என்றும், தனது சார்பாக அவரைக் கட்டியணைப்பார்கள் என்றும் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

தந்தையை நேரில் அணைத்துக்கொள்ள முடியாத காரணத்தினால், எழுத்துக்கள் மூலம் அவரை அணைத்துக்கொள்ள விரும்புவதாகவும், தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிணைப்பைத் தொலைவு ஒருபோதும் உடைத்துவிட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் சூழலில் தனது தந்தை எதிர்கொண்ட சிரமங்கள், அழுத்தங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு மத்தியிலும், கிறுவாபத்துவின் மஹிந்த ராஜபக்ச என்ற எளிமையான தனது தந்தைக்கு, அவரது அன்புக்குரிய மூத்த மகனாகிய தான் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும், மனவலிமையையும், அளவற்ற அன்பையும் தெரிவித்துக்கொள்வதாக நாமல் ராஜபக்ச தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் எனது அன்புத் தந்தையே!” எனத் தனது பதிவை அவர் நிறைவு செய்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *