முச்சந்தி
வரலாற்றை மறக்கச் சொல்வது இன அடையாளத்தை இழப்பதற்குச் சமம்!…. சிட்னியில் மாத்தளை சோமு உரை… ஐங்கரன் விக்கினேஸ்வரா

சிட்னிவாழ் மூத்த எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்களின் ‘பால்வனம்’ மற்றும் ‘பர்மிய நாடோடிக் கதைகள்’ ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா, 15.11.2026 அன்று வென்ட்வேர்த்வில் சமூக மண்டபத்தில் நடைபெற்றது. சிட்னி வாழ் தமிழ் இலக்கிய ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டதால் அரங்கம் நிறைந்திருந்தது.
நிகழ்வுக்குத் திரு. சிவ.வரதன் தலைமை தாங்க, திரு. கோகுலன் வரவேற்புரை நிகழ்த்தினார். திரு. கந்தையா நாகேந்திரம் கருத்துரை வழங்கினார். தொடர்ந்து எழுத்தாளர் ஐங்கரன் விக்கினேஸ்வரா வாழ்த்துரை வழங்கிச் சிறப்பித்தார். ‘பர்மிய நாடோடிக் கதைகள்’ நூலைத் திருமதி. கீதா மதிவாணன் அறிமுகப்படுத்தினார். ‘பால்வனம்’ நாவல் தொடர்பான அறிமுகத்தையும் ஆய்வுரையையும் நந்தன் தர்மபாலன் நிகழ்த்தினார். இளைய தலைமுறையினரின் பார்வையில் நூல்களை அணுகும் வகையில் செல்வி சுடர்க்கொடி முத்தரசு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவுஸ்திரேலிய தேசிய கீதத்தையும் இனிய குரலில் பாடி அனைவரது பாராட்டையும் பெற்ற இளம் திறமையாளருக்கும், ‘பர்மிய நாடோடிக் கதைகள்’ குறித்த சிறப்பான விமர்சனத்தை முன்வைத்த இளம் வாசகருக்கும் சிறப்பு நன்றிகள் தெரிவிக்கப்பட்டன. இளம் தலைமுறையினரின் இத்தகைய இலக்கியப் பங்களிப்புகள் தமிழ் வாசிப்புப் பண்பாட்டின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
மேடையில் உரையாற்றிய அனைவரும் சுருக்கமாகவும் கருத்துச் செறிவுடனும் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். தேவையற்ற நீண்ட உரைகள் தவிர்க்கப்பட்டு, நூல்களையும் அவற்றின் இலக்கியப் பெறுமதியையும் மையப்படுத்திய நிகழ்வாக இது அமைந்தது.
வரலாற்றை மறக்கச் சொல்வது இனத்தின் அடையாளத்தை இழப்பதற்குச் சமம் என
எழுத்தாளர் மாத்தளை சோமு அவர்கள் ஆற்றிய ஏற்புரை நிகழ்வின் முக்கியமான பகுதியாக அமைந்தது. வரலாற்றைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், ஒரு இனத்தின் மொழி, பண்பாடு, வரலாறு ஆகியவற்றுக்கிடையிலான ஆழமான தொடர்பு குறித்தும் தனது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்தார்.
வரலாற்றை மறந்த இனம் ஒருபோதும் நிலையாக இருக்க முடியாது. வரலாறே எமது மொழியின் அடையாளமாக இருக்கிறது. எனவே, எமது வரலாற்றைத் தொடர்ந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும். வரலாற்றை மறக்கச் சொல்வது எமது இனத்தின் சுய அடையாளத்தை இழக்கச் செய்வதற்குச் சமமானது என்ற கருத்தை அவர் வலியுறுத்தினார்.
மேலும், அவுஸ்திரேலிய மக்கள் தங்களுடைய மூதாதையர் வரலாற்றையும் மரபுகளையும் சிறப்பாக நினைவுகூர்ந்து, அவற்றின் ஊடாகத் தமது வரலாற்று அடையாளத்தைப் பேணிப் பாதுகாப்பதைச் சுட்டிக்காட்டினார்.
வரலாற்றைப் பாதுகாப்பதும், அதன் உண்மைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதும் ஒரு சமூகத்தின் அடிப்படைக் கடமை என்பதை அவரது உரை நினைவூட்டியது. குறிப்பாக, மொழியையும் வரலாற்றையும் பிரித்துப் பார்க்க முடியாது என்ற அவரது கருத்து கவனிக்கத்தக்கது.

உலகளாவிய நெருக்கடிகள் குறித்தும் மாத்தளை சோமு தனது கவலையை வெளிப்படுத்தினார். முதலாளித்துவ நிறுவனங்களின் இலாப நோக்கம், உலகின் பல்வேறு பகுதிகளில் தொடரும் போர்கள், பருவநிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மனிதகுலத்தின் எதிர்காலத்துக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களைச் சுட்டிக்காட்டினார்.
இத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்து முன்னெடுப்பேன் என்ற அவரது உறுதிமொழி, ஓர் உண்மையான எழுத்தாளரின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்தியது.
நிகழ்வின் இறுதியில் எஸ். வசந்தராஜா நன்றியுரை வழங்கினார். விழாவில் எழுத்தாளர் மாத்தளை சோமு நிறைவுரையாற்றினார்.
வாசிப்பே எழுத்தாளர்களுக்கான உண்மையான ஆதரவு என அவர் மேலும் தெரிவித்தார். எழுத்தாளர் மாத்தளை சோமுவின் ‘பால்வனம்’ மற்றும் ‘பர்மிய நாடோடிக் கதைகள்’ ஆகிய நூல்கள் தற்போது வாசகர்களின் கைகளுக்குக் கிடைத்துள்ளன.
எழுத்தாளர்களைப் பாராட்டுவதும் வாழ்த்துவதும் மட்டும் போதாது. அவர்களுடைய படைப்புகளை வாங்கி வாசிப்பதும், அவற்றை மற்றவர்களிடம் அறிமுகப்படுத்துவதும், புதிய படைப்புகள் உருவாக ஊக்கமளிப்பதும்தான் உண்மையான இலக்கிய ஆதரவாகும். ஒரு புத்தகத்தை வாங்குவது என்பது வெறுமனே ஒரு நூலைப் பெறுவது மட்டுமல்ல; ஒரு எழுத்தாளரின் அடுத்த படைப்புக்கான நம்பிக்கையையும் ஆற்றலையும் வழங்குவதாகும்.
மொழியைப் பாதுகாப்போம்; வரலாற்றை ஆவணப்படுத்துவோம்; வாசிப்புப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவோம். சிட்னி தமிழ் வாசகர்களின் பேராதரவுடன் மற்றுமொரு சிறப்பான தமிழ் இலக்கிய நிகழ்வாக இந்த நூல் வெளியீட்டு விழா இனிதே நிறைவடைந்தது.
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் ஏற்பாட்டாளர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தனர்.
![]()