பலதும் பத்தும்

கனடாவில் இயேசு கிறிஸ்துவின் வெண்கலச் சிலை திருட்டு!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கத்தோலிக்கப் பாடசாலை ஒன்றின் முற்றத்தில் நிறுவப்பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் முழு உருவச் செப்புச் சிலை திருடப்பட்ட சம்பவத்திற்கு, அம்மாகாணத்தின் நியமிக்கப்பட்டுள்ள முதல்வர் லோர்ன் டோர்க்சன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ரே நகரில் அமைந்துள்ள புனித ஜோன் போல் II அகடமி பாடசாலையின் முற்றத்திலிருந்த சிலை திருடப்பட்டமை குறித்து சனிக்கிழமை சமூக வலைத்தளத்தில் லோர்ன் டோர்க்சன் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு விசுவாச சமூகத்திற்கும் பாடசாலைக்கும் எதிராக இழைக்கப்பட்ட அவமானகரமான செயல். இத்தகைய செயல் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சமூகத்தையும் காயப்படுத்துகிறது; இதற்கு எமது மாகாணத்தில் இடமில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த நவம்பர் 11 ஆம் திகதி, பாடசாலை சபையின் தலைவர் கலாநிதி ஜோசப் கிங் இத்திருட்டுச் சம்பவம் குறித்த தகவலை முதலில் இணையத்தில் பகிர்ந்திருந்தார்.

சிலையின் அடிப்பாகம் மட்டுமே எஞ்சியிருந்ததைக் காட்டும் காணொளி ஒன்றை வெளியிட்ட அவர், நள்ளிரவு அல்லது அதிகாலையில் யாரோ வாள் கொண்டு சிலையை அறுத்து எடுத்துச் சென்றுள்ளனர். இந்த அழகிய கலைப்படைப்பைச் சிதைத்து, எதற்காக எடுத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை.இது மிகவும் வருத்தமளிக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னர் இயேசு கிறிஸ்து தனது சீடர்களுடன் அமர்ந்திருந்த ‘இறுதி இராப்போசனம்’ நிகழ்வைச் சித்தரிக்கும் வகையில், இயேசு கிறிஸ்துவின் சிலையுடன் 12 வெற்று இருக்கைகள் கொண்ட கலைப்படைப்பின் ஒரு பகுதியாகவே இந்தச் சிலை நிறுவப்பட்டிருந்தது.

பாடசாலை நிர்வாகத்தால் வெளியிடப்பட்ட கண்காணிப்பு கமரா காட்சிகளை ஆய்வு செய்து, இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக சர்ரே பொலிஸ் சேவை உறுதிப்படுத்தியுள்ளது.

சந்தேகநபர்கள் அல்லது சந்தேகத்திற்கிடமான வாகனங்களைத் தேடும் ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை எனவும், விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *