பலதும் பத்தும்

ஓடுபாதையில் மோதியதா வானூர்தியின் பின்பகுதி?

பிரித்தானியாவின் லண்டனில் அமைந்துள்ள ஹீத்ரோ சர்வதேச வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்ற பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வானூர்தி ஒன்று, அதன் பின்பகுதியால் ஓடுபாதையில் இரண்டு முறை மோதியிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் இருந்து பயணித்த BA431 என்ற இலக்கத்தைக் கொண்ட வானூர்தி, நேற்று (12) ஹீத்ரோ வானூர்தி நிலையத்தில் தரையிறங்க முயன்றபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தரையிறங்குவதற்காக ஓடுபாதையை அண்மித்தபோது, வானூர்தியின் பின்பகுதி ஓடுபாதையில் மோதியிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து, விமானிகள் தரையிறங்கும் முயற்சியைக் கைவிட்டு, வானூர்தியை மீண்டும் மேலே செலுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாகத் தரையிறங்க முயற்சித்தபோது வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனத்தின் பேச்சாளர், வானூர்தி பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரித்தானிய வானூர்தி விபத்துகள் விசாரணைப் பிரிவு (AAIB) முன்னெடுத்து வரும் விசாரணைகளுக்கு நிறுவனம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதால், சட்டக் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தச் சம்பவம் தொடர்பில் தற்போது மேலதிக கருத்துகளை வெளியிட முடியாது எனவும் பிரிட்டிஷ் ஏயார்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், வானூர்தியின் பின்பகுதி உண்மையில் ஓடுபாதையில் மோதியதா? மற்றும் இந்தச் சம்பவத்திற்கான காரணம் என்ன? என்பது இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *