கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக வெடித்த போராட்டம்!; திருமலையில் ஒன்றிணைந்த சட்டத்தரணிகள்

திருகோணமலை நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.எஸ்.எம். சம்சுடீனால் பிறப்பிக்கப்பட்ட சட்டபூர்வமான பிடியாணை உத்தரவை விமர்சித்தும், நீதிமன்றத்தையும் நீதிபதியையும் அவமதிக்கும் வகையிலும் பலாங்கொடை கஸ்ஸப்ப தேரர் கருத்து வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரம் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், குறித்த கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருகோணமலை மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் இன்று (13) திருகோணமலை நீதிமன்றத் தொகுதிக்கு முன்பாக கண்டனப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் பெருமளவிலான சட்டத்தரணிகள் கலந்துகொண்டு, நீதித்துறையின் கௌரவத்தையும் சுயாதீனத்தன்மையையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த சட்டத்தரணிகள் சங்கத்தின் கிளைத் தலைவர், நீதித்துறை அரசியல் உள்ளிட்ட எவ்வித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் செயற்படுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், நீதிமன்றங்களினதும் நீதிபதிகளினதும் கௌரவத்தைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க சட்டத்தரணிகள் களமிறங்கியுள்ளமை அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.
![]()