இலங்கை

அரசியலுக்கு மீண்டும் திரும்ப மாட்டேன்: 2 வருடங்களின் பின் மனம் திறந்த கஞ்சன!

அரசியல் வாழ்விலிருந்து விலகித் தனியார் துறையில் தனது தற்போதைய தொழிலில் முழுமையான திருப்தியுடன் ஈடுபட்டு வருவதாகவும், மீண்டும் அரசியலுக்குத் திரும்பும் எண்ணமோ ஆர்வமோ தனக்கில்லை எனவும் முன்னாள் அமைச்சர் கஞ்சன விஜேசேகர திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

2024ஆம் ஆண்டு நவம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் விசேட பதிவொன்றை இட்டுள்ள அவர், தனது அரசியல் பயணம் மற்றும் பெருநிறுவனத் துறைக்கான மாற்றம் குறித்துப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

குறித்த தேர்தல் முடிவுகள் தான் எதிர்பார்த்தபடி அமையாவிட்டாலும், அத்தேர்தலில் போட்டியிட்டமை தனது வாழ்க்கையின் முக்கியமானதொரு அத்தியாயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தேர்தல் நடைபெற்று ஒரு மாதத்தின் பின்னர், தனது அனைத்து அரசியல் ஈடுபாடுகளையும் செயற்பாடுகளையும் முழுமையாக நிறுத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பொதுச் சேவையில் ஈடுபட்டிருந்த காலப்பகுதியில் தனக்கு ஆதரவளித்த, வழிகாட்டிய மற்றும் தன்னுடன் இணைந்து பணியாற்றிய அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ள கஞ்சன விஜேசேகர, நாட்டிற்குத் தான் ஆற்றிய பங்களிப்பு குறித்துத் தொடர்ந்தும் பெருமிதம் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலிலிருந்து தனியார் துறைக்கு மாறி 23 மாதங்கள் கடந்துள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ள அவர், ஆரம்பத்தில் பகுதிநேரப் பணியாகத் தொடங்கிய தனது புதிய பயணம், தற்போது முழுநேரத் தொழில்முறைப் பொறுப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அதனைத் தான் மிகவும் மகிழ்ச்சியுடன் முன்னெடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

இந்தப் புதிய வாழ்க்கை முறை மாற்றத்தினால் தனது குடும்பத்தினருடன் அதிக நேரத்தைச் செலவிடவும், உடல் ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதியில் கவனம் செலுத்தவும், பயணங்களை மேற்கொள்ளவும், தனிப்பட்ட சுதந்திரத்தை அனுபவிக்கவும், புதிய துறைசார் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

“நான் அரசியலிலிருந்து விலகி முன்னோக்கிச் சென்றுவிட்டேன்; மீண்டும் அரசியல் வாழ்விற்கோ அல்லது அரசியல் செயற்பாடுகளுக்கோ திரும்பும் எண்ணமோ ஆர்வமோ எனக்கு இல்லை” என அவர் தனது பதிவில் உறுதியாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இன்று (14) தனது மறைந்த தந்தையின் 84ஆவது பிறந்ததினம் என்பதால் அந்நாள் தனக்குத் தனிப்பட்ட ரீதியிலும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தந்தையின் மறைவுக்குப் பின்னர் வரும் முதலாவது பிறந்ததினத்தில் அவரை நினைவுகூர்ந்துள்ள கஞ்சன விஜேசேகர, அவர் என்றும் தமது குடும்பத்தினரின் இதயங்களில் நிலைத்திருப்பார் என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

வாழ்க்கையின் ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு நோக்கத்தைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சில அத்தியாயங்கள் பெறுமதியான பாடங்களைக் கற்றுக்கொடுத்து, மனிதர்களைப் பக்குவப்படுத்தி, முற்றிலும் புதிய பயணங்களுக்குத் தயார்படுத்துவதாகவும் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *