உலகம்

இறுதி கட்டத்தில் வர்த்தக ஒப்பந்தம்: டிசம்பரில் ட்ரம்பை சந்திக்கிறார் மோடி

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான முன்மொழியப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பெரும்பாலான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ஹிந்துஸ்தான் டைம்ஸ் தலைமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எஞ்சியுள்ள சில பிரச்சினைகளில் பெரும்பாலானவை அமெரிக்கத் தரப்புடன் தொடர்புடையவை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நிறைவு செய்யப்படும் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவைப் பொறுத்தவரையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையிலும், சமநிலையானதாகவும், ஏனைய போட்டி நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியப் பொருட்களுக்கு சாதகமான சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் ஒப்பந்தம் அமைய வேண்டும் என்பதே முக்கிய நோக்கம் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய சந்தையாக அமெரிக்கா விளங்குவதால், அந்நாட்டுடனான வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்குப் பெரும் நன்மைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இறக்குமதி வரிகள் தொடர்பான முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுதல், வர்த்தகத் தடைகளை நீக்குதல் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும்.

இதற்கிடையில், எதிர்வரும் டிசம்பர் 14 மற்றும் 15ஆம் திகதிகளில் அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா செல்லவுள்ளார்.

இதன்போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாட வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மாதம் மும்பைக்கு விஜயம் செய்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ரூபியோவும், இரு நாடுகளும் வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு மிகவும் நெருக்கமாக இருப்பதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது,

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *