தையிட்டியில் அனுமதி இல்லாத கட்டுமானங்கள் இடிக்கப்படும்; வலி வடக்கு பிரதேசசபைத் தவிசாளர் அறிவித்தல்

யாழ்ப்பாணம் – தையிட்டி திஸ்ஸ விகாரை வளாகத்துக்குள் அனுமதி இல்லாமல் அமைக்கப்படும் சட்டவிரோதக் கட்டுமானங்கள் இடித்து அகற்றப்படும் என்பதுடன் அது தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்படும் என வலிகாமம் வடக்குப் பிரதேசசபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் அறிவித்தல் அனுப்பியுள்ளார்.
தமிழ் மக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரை வளாகத்துக்குள் மேலும் சில சட்டவிரோதக் கட்டுமானங்கள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் தற்போதுவரை எந்தத் தடங்கலும் இல்லாமல் கட்டுமானப் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்தே, குறித்த கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறும், இல்லையேல் அவற்றை பிரதேசசபை இடித்து அகற்றும் என்று தவிசாளர் சுகிர்தன் அறிவித்தல் கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்தச் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பில் விகாராதிபதிக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்றும் தவிசாளர் சுகிர்தன் அந்த அறிவித்தல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
![]()