இலங்கை

கொட்டும் மழையிலும் 19ஆவது வாரமாக தொடரும் பலாலி மக்களின் போராட்டம்

பலாலி மக்களின் பூர்வீக வாழிடங்களையும் விவசாயக் காணிகளையும் முழுமையாக விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் கவனவீர்ப்புப் போராட்டம், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது   ஞாயிற்றுக்கிழமை 19 ஆவது வாரமாகவும் பலாலிச் சந்தியில் தொடர்ச்சியாக நடைபெற்றது.

தமது சொந்த நிலங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்து 36 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், இன்னமும் தமது பூர்வீகக் காணிகளை மீளப் பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலை தொடர்வதாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மிகுந்த கவலை வெளியிட்டுள்ளனர்.

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படாத காரணத்தால், தமது சொந்த இடங்களில் மீண்டும் குடியேறுதல், விவசாய நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்ற முடியாத நிலை காணப்படுவதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நிலம் என்பது வெறுமனே ஒரு சொத்தாக மட்டும் இல்லாமல், தமது குடும்பங்களின் வரலாறு, வாழ்வாதாரம், பண்பாடு மற்றும் எதிர்காலத் தலைமுறைகளின் உரிமையுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மக்களின் வாக்குப் பலத்தின் ஊடாக ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு, தமிழ் மக்களின் நில உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு முதன்மை முன்னுரிமை அளித்து விரைவான தீர்வை வழங்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே, பலாலி மக்களின் நீண்டகால நில உரிமைப் பிரச்சினைக்கு வெறுமனே அரசியல் வாக்குறுதிகளுடன் முடிவுகட்டாமல், உடனடி நடைமுறைச் செயற்பாடுகள் மூலம் காணி விடுவிப்பை உறுதி செய்ய வேண்டும் என்பதே இந்தப் போராட்டத்தின் பிரதான கோரிக்கையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *