அரசின் அலட்சியத்தால் நாடு முழுவதும் மின் தடை; அஜித் பெரேரா எம்.பி. குற்றச்சாட்டு

மின்சார கட்டமைப்பை நவீனமயப்படுத்த முன்வைக்கப்பட்டிருந்த யோசனைகளை அரசாங்கம் நிறைவேற்ற தவறியமையே நாடுபூராகவும் சனிக்கிழமை பல மணிநேர மின்தடை ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.
களுத்துறையிலுள்ள தனது அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பல்வேறு காரணங்களால் நாட்டில் இதற்கு முன்னர் திடீர் மின்தடைகள் ஏற்பட்டிருந்த போதும், இலங்கை வரலாற்றில் தொழிநுட்ப கோளாறு காரணமாக அதிக நேரம் மின் துண்டிப்பு ஏற்பட்டது இதுவே முதல்தடவையாகும். சனிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் நாடு பூராகவும் மின் துண்டிப்பு ஏற்பட்டது. பின்னர் கட்டம் கட்டமாக சரிசெய்ய நடவடிக்கை எடுத்து, இரவு 10. 45 மணியளவிலேயே நாடுபூராகவும் மின்சாரம் வழமைக்கு திரும்பியது.
மேலும் கடந்த வருடம் பெப்ரவரி 9ஆம் திகதி இவ்வாறானதொரு திடீர் மின்துண்டிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டது. அப்போது பாணந்துறை பகுதியில் குரங்கு ஒன்று பிரதான மின் கட்டமைப்பில் பாய்ந்ததால் மின் துண்டிப்பு ஏற்பட்டதாக அப்போது இருந்த மின்சார அமைச்சர் பொய் கூறி இருந்தார். பின்னர் அது தொடர்பில் தேடிப்பார்க்கும்போது, தொழிநுட்ப கோளாறு காரணமாகவே இடம்பெற்றது என்பது தெரியவந்தது. இவ்வாறான தொழிநுட்ப கோளாறு காரணமாக மீண்டும் மின்சார துண்டிப்பு ஏற்படாமல் தவிர்ப்பதற்கு தேவையான தொழிநுட்ப மூலோபாயங்கள் மற்றும் புத்தாக்க திட்டங்களை மேற்கொள்ள வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
ஆனால் அந்த அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்த எந்த நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. எமது ஆட்சியில் அறிமுகப்படுத்திய சூரிய மின்சக்தி திட்டத்தின் மூலம் இதுவரை 3557 மெகாவோட் மின்சாம் உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இதன் காரணமாகவே மின்சார கட்டமைப்பு தற்போது பாதுகாக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நீர் மின் மற்றும் நிலக்கரி மின் உற்பத்திக்கு இணையாக சூரிய சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியுமாக இருக்கிறது. எனவே கடந்த வருடம் பெப்ரவரி மாதம் இடம்பெற்ற திடீர் மின் துண்டிப்பு ஏற்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கைகளின் பரிந்துரைகளை செயற்படுத்த தவறியதன் காரணமாகவே தற்போது ஏற்பட்ட திடீர் மின்சார துண்டிப்புக்கு காரணமாகும். அன்று ஏற்பட்ட திடீர் மின்சார துண்டிப்புக்கும் நேற்று முன்தினம் ஏற்பட்ட திடீர் மின்சார துண்டிப்புக்குமான காரணம் ஒரே மாதிரியானதாகும்.
நுரச்சோலை அனல் மின் நிலைய மின்சார உற்பத்தியின் மூன்று இயந்திரங்களும் தற்போது செயலிழந்துள்ளன. இதனை சரி செய்துகொள்ளும் வரை அதிக விலை கொடுத்து டீசல் பயன்படுத்தியே மின் உற்பத்தி செய்ய வேண்டி ஏற்படுகிறது.புத்தாக்க சக்திகளைக்கொண்டு மின்சாரத்தை உற்பத்தி செய்து, மக்களுக்கு அதன் மூலம் மின் கட்டணத்தை குறைப்பதற்கு முடியுமாகிறது. இதனை அரசாங்கத்தினால் முழுமையாக செய்ய முடியாது என்பதாலே நாங்கள் மின்சார கட்டமைப்பை மறுசீரமைக்கும் யோசனையை மேற்கொண்டோம். ஆனால் அரசாங்கம் மறுசீரமைக்கும் நடவடிக்கையை பகுதி அளவிலே மேற்கொண்டிருக்கிறது. தனியார் துறையுடன் மின்சார பரிமாற்றம் தொடர்பில் எந்த முதலீட்டையும் அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
எனவே மின்சார கட்டமைப்பை நவீனமயமாக்கும் நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள தவறியதன் விளைவே இவ்வாறு திடீர் மின்சார துண்டிப்பு ஏற்படுவதற்கு காரணமாகும். இது அரசாங்கத்தின் இயலாமையையே காட்டுகிறது. என்றார்.
![]()