அவசரமாக தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட ஷிரந்தி ராஜபக்ச! மகிந்த தரப்பு வெளியிட்ட தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச வைத்தியர்களின் பரிந்துரைகளின் பேரிலேயே கொழும்பு தேசிய வைத்தியசாலையிலிருந்து தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மகிந்த தரப்பு உறுதிப்படுத்தியுள்ளன.
இந்நிலையில், அவர் தற்போது தனியார் வைத்தியசாலையில் தனது வழக்கமான வைத்தியரிடம் சிகிச்சை பெற்று வருகின்றார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
ஷிரந்தி ராஜபக்ச கைது
“சிரிலிய சவிய” கணக்கு தொடர்பான தொடர் விசாரணைகளின் பேரில் இலஞ்ச அல்லது ஊழல் ஆணைக்குழுவால் முன்னாள் முதல் பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவியுமான ஷிரந்தி ராஜபக்ச கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத்தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு (16.10.2026) கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.பொதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது ஷிரந்தி ராஜபக்சவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
திடீர் உடல்நலக்குறைவு
மருத்துவ அறிக்கையை ஆய்வு செய்த நீதவான், ஷிரந்தி ராஜபக்சவின் மருத்துவ நிலை குறித்த தகவல்கள் அறிக்கையில் உள்ளதாகவும், அவர் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து ஷிரந்தி ராஜபக்சவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
இந்த நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஷிரந்தி ராஜபக்ச அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் தேசிய வைத்தியசாலையின் வைத்தியர்களின் பரிந்துரைகளின் பேரில் தற்போது அவர் நவலோகா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, மேலதிக வைத்திய பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கடந்த 12 ஆம் திகதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள நவலோக (Nawaloka) தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் முதலில் தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டு பின்னர் சாதாரண சிகிச்சைக்கு மாற்றப்பட்ட நிலையில், தற்போது வைத்திய கண்காணிப்பில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
![]()