இலங்கை

காவியுடையின் மீது கை வைத்துள்ளீர்கள்; கொதிக்கிறார் மொட்டு எம்.பி.

2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் மற்றும் பௌத்த மத கோட்பாடுகளுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. ஞானசார தேரர் மீது கை வைக்கவில்லை. காவியுடை மீது கை வைத்துள்ளீர்கள் .பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் காவியுடை கலைக்கப்பட்டு,அவருக்கு கைதி உடை அணிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கம் இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சானக மாதுகொட தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அந்நிய செலாவணிச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,

ஞானசார தேரருக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை தீர்ப்பு மற்றும் அவரது நிலைப்பாடு பற்றி நாங்கள் பேசவில்லை. ஆனால் காவியுடையை நீக்கியமை முற்றிலும் தவறானது.பொது பலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரின் காவியுடை கலைக்கப்பட்டு, அவருக்கு கைதி உடை அணிவிக்கப்பட்டுள்ளது.இனம் என்ற அடிப்படையில் நாம் வெட்கப்பட வேண்டும்.

2500 ஆண்டுகால பழமை வாய்ந்த புத்தசாசனம் மற்றும் பௌத்த மத கோட்பாடுகளுக்கு எதிராகவே இந்த அரசாங்கம் செயற்படுகிறது. ஞானசார தேரர் மீது கை வைக்கவில்லை. காவியுடை மீது கை வைத்துள்ளீர்கள் என்பதை ஆளும் தரப்பு விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஞானசார தேரரின் காவியுடை குறித்து தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மகாசங்கத்திற்கும், மகாநாயக்க தேரர்களுக்கும் மாத்திரமே உள்ளது. அரசாங்கத்துக்கு அந்த அதிகாரம் கிடையாது. ஆகவே பௌத்த துறவியின் காவியுடை நீக்கப்பட்டதையிட்டு ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *