கைது செய்வதைத் தடுங்கள் முன்பிணை கோரும் ஷிரந்தி; மாளிகாகந்த நீதிமன்றத்தில் மனு

தன்னை கைது செய்ய முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு தடையுத்தரவை பிறப்பிக்குமாறும் மற்றும் தனது கைதுக்கு முன்பிணை கோரியும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
தனது சட்டத்தரணி ஊடாக கொழும்பு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை அவர் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கமைய தன்னை கைது செய்வதற்கு திட்டமிடப்படுவதாகவும், தற்போது சிங்கபூரில் இருக்கும் தான் நாடு திரும்பும் போது கைது செய்யப்படலாம் என்றும் இதனால் தான் கைது செய்யப்படுவதனை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஷிரந்தி ராஜபக்ஷ அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இம்மனுவில் பிரதிவாதிகளாக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் உள்ளிட்டோரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
வாக்குமூலமளிப்பதற்காக நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு தனக்கு அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காகத் தான் வெளிநாடு செல்ல வேண்டியிருந்ததாக திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ தனது மனுவின் மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளார்.
சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் இலங்கை திரும்பும்போது விமான நிலையத்திலேயே வைத்துத் தன்னைக் கைது செய்யும் அபாயம் உள்ளதால், பொருத்தமான ஏதேனும் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் தன்னை பிணையில் விடுவிக்குமாறு அவர் தனது மனுவின் மூலம் நீதிமன்றத்தை மேலும் கோரியுள்ளார்.
விசாரணையொன்று தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த 24 ஆம் திகதி நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் 16ஆம் திகதி சிங்கபூருக்கு சென்றிருந்தார்.
அதற்கு முன்னர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஷிரந்தி ராஜபக்ஷ, மேலதிக சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காவே அவர் சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அவர் நாடு திரும்பும் போது கைது செய்யப்படலாம் என்று தெரிவிக்கப்படுவதால், தனது கைதை தடுக்கக் கோரி சிரந்தி ராஜபக்ஷ நீதிமன்றத்தில் முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
![]()