அரச காணிகளே விடுவிக்கப்படுகிறது; மக்களின் காணிகளை அரசு விடுவிக்கவில்லை

காங்கேசன்துறையில் 180 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை விடுவித்ததாக இராணுவம் அறிவித்துள்ள நிலையில், தமது காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அத்துடன், அரச காணிகளை விடுவித்துவிட்டு முறையான காணி விடுவிப்பு இடம்பெற்றதாக போலியான தோற்றப்பாட்டை வெளியுலகில் உருவாக்க இராணுவம் முயற்சிக்கின்றது என்றும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
காங்கேசன்துறையில் இலங்கை சிமெந்துக் கூட்டுத் தாபனத்துக்குச் சொந்தமான 187.56 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டதாக இராணுவத்தினர் அண்மையில் அறிவித்திருந்தனர். யாழ்ப்பாணம் மாவட்டச் செயலர் மருதலிங்கம் பிரதீபனிடம் இது தொடர்பான சான்றிதழ் கடிதத்தையும் இராணுவத்தினர் ஒப்படைத்திருந்தனர்.
இதையடுத்தே, சிமெந்துக் கூட்டுத்தாபனத்தின் காணிகளை விடுவித்துவிட்டு பொதுமக்களின் காணிகளை விடுவித்தது போன்றதொரு தோற்றப்பாட்டை உருவாக்க இராணுவம் முயற்சிக்கின்றது என பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர்.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கூறியதாவது:
காங்கேசன்துறையில் விரைவில் காணிவிடுவிப்பு இடம்பெறும் என அரச தரப்பு உயர்மட்டங்கள் கூறி வருகின்றன. இதனால் எமது காணிகள் விடுவிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இருந்தோம். ஆனால், அரசாங்கத்தின் காணிகளையே இராணுவம் விடுவித்துள்ளது.
அரசாங்கத்தின் காணிகளை விடுவிக்குமாறு கோரி நாங்கள் போராட்டம் நடத்தவில்லை. மாறாக எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்குமாறு கோரியே போராட்டம் நடத்துகிறோம். எனவே, அரச காணிகளை விடுவித்துவிட்டு எமது போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கு சதி இடம்பெறுகின்றதா என்ற அச்சம் எமக்கு ஏற்பட்டுள்ளது. மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்து ஆட்சிக்குவந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் விரைவில் எமது காணிகளை எம்மிடம் ஒப்படைக்க வேண்டும் – என்றனர்.
![]()