சுரேஷ் சலேக்கு சிகிச்சை வழங்கும் 10 வைத்தியர்களுக்கு நீதிமன்று அழைப்பாணை

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவுக்கு நியமிக்கப்பட்டுள்ள மருத்துவக் குழுவின் 10 வைத்தியர்களையும் எதிர்வரும் 6 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகரவினால் அழைப்பாணை உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுவை பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவில் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேஇ தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். அவரின் இருதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இருதயத்தில் சாதனம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் தெரிவிக்கப்பட்டது.
அவரது உடல் நிலை குறிப்பில் மருத்துவக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி சுரேஷ் சலே செப்டம்பர் 28 ஆம் திகதி வரை தேசிய வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் பரிந்துரைத்திருந்தனர்.
இந்நிலையில் குறித்த திகதி கடந்துள்ளதால், மேலதிக நடவடிக்கைகள் தொடர்பில் நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்துமாறு கோரியே இவ்வாறு 10 வைத்தியர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
![]()