இலங்கை

திலீபனின் சிலை வைப்பு வழக்கில் குற்றச்சாட்டுகள் என்ன? சந்தேகநபர்கள் யார்?

நல்லூரில் அமைந்திருந்த தியாகி திலீபனின் நினைவேந்தல் திடலிலிருந்து திலீபனின் சிலை அகற்றப்பட்டமை மற்றும் ஒலிபரப்புச் சாதனங்களைப் பயன்படுத்தியமை தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, “இந்த விவகாரத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் யாவை? அது தொடர்பான சந்தேகநபர்கள் யார்?” என்று கேள்விகளை எழுப்பிய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணம் நீதிவான் செ.லெனின்குமார் முன்னிலையில் பொலிஸார் சமர்ப்பித்த ‘பி’ அறிக்கை வெள்ளிக்கிழமை காலையில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே நீதிவான் மீண்டும் இந்தக் கேள்விகளை எழுப்பினார்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் பொலிஸார் சமர்ப்பித்த அறிக்கையில், பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் 2011 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஆகியவை மேற்கோள் காட்டப்பட்டிருந்தன.

அவற்றின் கீழ், பயங்கரவாதத்தை மீளுருவாக்கம் செய்ய முயற்சிப்பது போன்ற விடயங்கள் பற்றி அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்த போதிலும், திட்டவட்டமான குற்றச்சாட்டுகளோ, குற்றம் இழைத்தவர்கள் யார் அல்லது சந்தேகநபர்கள் பற்றிய பட்டியலோ குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. இதன் காரணமாக, அவ்விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டு வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.

இவ்விவகாரம் வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட பின்னர், அச்சமயம் மன்றில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி க.சுகாஷ் இது தொடர்பாகத் தெரிவிக்கையில்:

“திலீபனின் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தில் பொலிஸார் எவரையும் சந்தேகநபராகப் பெயர் குறிப்பிடாத காரணத்தால், நாங்கள் நீதிமன்றத்தில் எந்தவித விண்ணப்பமும் செய்யவில்லை.

இந்த விவகாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்காக அழைக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகவும், பொலிஸார் உத்தியோகப்பற்றற்ற முறையில் வழங்கிய தகவலின் அடிப்படையிலும் ஆஜராவதற்காக நாம் மன்றுக்கு வந்திருந்தோம்.

ஆனால், வழக்கு அழைக்கப் பட்டபோது சந்தேகநபர்களாக எவருடைய பெயரும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை; எவரும் அழைக்கப்படவுமில்லை. இதன் அடிப்படையில், இவ்வழக்கில் நாம் எந்தவிதமான விண்ணப்பங்களையும் செய்யவில்லை” என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *