இலங்கை

மஹிந்த அணி சர்வதேச சமூகத்தை நாடுவதன் நோக்கம் என்ன?

இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளைக் கோரி நாங்கள் சர்வதேசத்தை நாடவில்லை. நாட்டு நலனுக்காகவே ராஜதந்திரச் சந்திப்புகளை நடத்தி வருகின்றோம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடகப் பேச்சாளர் சஞ்ஜீவ எதிரிமான்ன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதரகங்களுக்குச் சென்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியினர் முக்கிய சந்திப்புகளை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்க மற்றும் சீனத் தூதுவர்களைச் சந்தித்துள்ள அவர்கள், ஏனைய தூதுவர்களையும் சந்திப்பதற்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்த சஞ்ஜீவ எதிரிமான்ன கூறியதாவது:

“இலங்கைக்கு எதிராகப் போர்க்குற்ற விசாரணையைக் கோரியோ, சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த கட்டக் கடனுதவியை நிறுத்துமாறு வலியுறுத்தியோ அல்லது இராணுவத்தினரைப் போர்க்குற்றவாளிகளாகப் பிரகடனப்படுத்துமாறு கோரியோ நாங்கள் சர்வதேச சமூகத்தை நாடவில்லை.

நாடு மற்றும் நாட்டு மக்களின் நலன் கருதி, சர்வதேசத்திடம் செல்ல வேண்டிய நேரத்தில் சென்றுதான் ஆக வேண்டும்.

தற்போது கூச்சலிடும் ஜே.வி.பி-யின் இளைஞர்களுக்காகவே அன்று மஹிந்த ராஜபக்ஷ ஜெனீவா சென்றார் என்பதை அக்கட்சியினர் இன்று மறந்து செயல்படுகின்றனர்.

சமூகத்தின் நலன் கருதி சர்வதேசத்தை நாடுவதில் தவறில்லை; நாட்டுக்கு எதிராகப் போலித் தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செல்லவில்லை.

எனவே, நாட்டுக்கு எதிராகப் போலித் தகவல்களை வழங்குவதற்காகச் சர்வதேசத்தை நாடுவது வேறு, நாட்டின் நலனுக்காக நாடுவது வேறு. நாங்கள் நடத்திய சந்திப்புகளில் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தவொரு விடயமும் இடம்பெறவில்லை” என்று அவர் தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *