இலங்கை

பொய் வழக்குகளைப் போட்டு மிரட்ட பொலிஸார் முயற்சி;  அஞ்சமாட்டோம் என்கிறார் கஜேந்திரன்

மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஸ்ரீலங்கா பொலிஸாரும் அரசும் கூட்டுச்சேர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்குள் அலைக்கழிப்பதன் மூலமாக அச்சத்தை ஏற்படுத்தி, நெருக்கடிகளை ஏற்படுத்தி, இந்த போராட்டச் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கச் செய்து தங்களுடைய ஆக்கிரமிப்பை முன்னோக்கிச் செல்லலாம் என்ற கனவு அவர்களிடம் இருக்கிறது. அந்த கனவு ஒருபொழுதும் நனவாகாது என அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்தார்.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் தொடர்பான வழக்கின் பின்னர் கருத்து வெளியிட்ட போது இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியிலே தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை ஸ்ரீலங்கா இராணுவத்தினர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து, அங்கே ஒரு சட்டவிரோதமான விகாரை ஒன்றை அமைத்திருந்தார்கள்.

அந்த காணியினுடைய உரிமையாளர்கள் குறித்த சட்டவிரோத விகாரை அகற்றப்பட்டு, தங்களுடைய காணிகள் தங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்ததிலிருந்து, அந்த மக்களுடைய போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறுபட்ட அரசியல் தரப்புகளும் சிவில் அமைப்புகளும் ஆதரவு வழங்கி போராட்டத்திலே பங்கெடுத்து வருகின்ற நிலையிலே, ஸ்ரீலங்கா அரசானது தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டவிரோதமான கட்டுமானத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவும், பௌத்த இனவாத அடிப்படையிலே அந்த சட்டவிரோத விகாரையைத் தொடர்ந்து ஒரு சட்டபூர்வமானதாக மாற்றுவதற்காகவும், போராட்டக்காரர்கள் மீது அபாண்டமான பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, வழக்குகளைப் போட்டு, நீதிமன்றத்திற்கு அலைக்கழிப்பதன் மூலமாக இந்த போராட்டத்திலிருந்து பல்வேறுபட்ட தரப்புகளையும் விலகச் செய்வதன் மூலம் தங்களுடைய நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற ஒரேயொரு நோக்கத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு ஸ்ரீலங்கா பொலிஸார் செயற்படுகின்றனர்.

இனவாத அடிப்படையிலே செயல்படுகின்ற பொலிஸார் எங்களுக்கு எதிராகப் பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள்.அவர்கள் போட்டிருக்கக்கூடிய பல்வேறுபட்ட வழக்குகளிலே ஐந்து வழக்குகள் நேற்று மல்லாகம் நீதவான் நீதிமன்றத்திலே அழைக்கப்பட்டிருந்தது.

எங்களுடைய மக்களின் நியாயமான போராட்டங்களை ஒடுக்குவதற்காக ஸ்ரீலங்கா பொலிஸாரும் அரசும் கூட்டுச்சேர்ந்து பொய் வழக்குகளைப் போட்டு நீதிமன்றங்களுக்குள் அலைக்கழிப்பதன் மூலமாக அச்சத்தை ஏற்படுத்தி, நெருக்கடிகளை ஏற்படுத்தி, இந்த போராட்டச் செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கச் செய்து தங்களுடைய ஆக்கிரமிப்பை முன்னோக்கிச் செல்லலாம் என்ற கனவு அவர்களிடம் இருக்கிறது. அந்த கனவு ஒருபொழுதும் நனவாகாது.

எங்களைப் பொறுத்தவரையிலே, தொடர்ச்சியாக ஜனநாயக உரிமைகளை வென்றெடுப்பதற்காக தொடர்ந்து போராடுவோம். மக்கள் இந்த போராட்டங்களோடு ஒன்றித்து ஒத்துழைக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் ஒட்டுமொத்த மக்களுடைய பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக்கூடியதாக இருக்கும்.

தையிட்டியிலே நடைபெறுகிற போராட்டம் என்பது வெறுமனே இந்த தையிட்டியிலே அந்த காணி உரிமையாளர்களுக்கான போராட்டம் மட்டுமல்ல; வடக்குக் கிழக்கில் பூர்விகமாக இருக்கக்கூடிய தமிழ் மக்களுடைய இருப்பைப் பாதுகாப்பதற்கான போராட்டம். ஆகவே, இது ஒரு உரிமைக்கான போராட்டம். இந்த போராட்டத்தை வெளிப்படுத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் தொடர்ந்தும் ஒத்துழைக்க வேண்டும் – என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *