இலங்கை

இரு தரப்பிடையே வெடித்த மோதல்; அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் பொலிசார் துப்பாக்கிச் சூடு

கிளிநொச்சி பூநகரி பகுதியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கிளிநொச்சி – பூநகரி கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக்கழக மைதானத்தில் உதைபந்தாட்ட இறுதிப் போட்டியொன்று நடைபெற்றுள்ளது.

இந்த இறுதிப் போட்டியில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார்.

போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட குழப்பநிலை பெரிய கலவரமாக மாறியுள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த பொலிஸார் வான் நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், மோதல் தீவிரமடைந்த நேரத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் சம்பவ இடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக போட்டியை பார்க்க வந்தவர்கள் தெரிவித்தனர்.

வடமாகாண மட்டத்திலான இவ்வாறான முக்கிய விளையாட்டுப் போட்டியை உரிய அதிகாரம் இல்லாத குழுவிடம் ஒப்படைத்ததே குழப்பத்துக்கு முக்கிய காரணம் எனவும் விளையாட்டு ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *