தாக்குதல் இலக்கு ரணிலா என விசாரணை நடத்தவும்; ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்து

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரியொருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தில் உண்மையான இலக்கு அந்த பாதுகாப்பு அதிகாரியா? அல்லது எதிர்காலத்தில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நடத்தப்படவிருக்கும் தாக்குதலா? அல்லது அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதல் தவறுதலாகப் பாதுகாப்பு அதிகாரி மீது பட்டுவிட்டதா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதனால் இது தொடர்பாக அரசாங்கம் முறையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் பின்னர் வெளியேறியபோது, அவரது பாதுகாப்பு அதிகாரி மீது அங்கிருந்த தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் வீடியோ பதிவாளர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு இலக்கான பாதுகாப்பு அதிகாரி, இச்சம்பவத்தைத் தொடர்ந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி இன்று செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி கருத்துக்களைத் தெரிவித்தது.
இதன்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரான முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன கூறுகையில்,
தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல வெளியிட்ட அறிக்கையின் காரணமாகவே நாங்கள் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்துகின்றோம். அவர் தனது அறிக்கையில், இது ஒரு சிறிய சம்பவம் என்று கூறியுள்ளார். அங்கேயே ஒரு கேள்வி எழுகிறது. இந்த விசாரணை எந்த திசையில் நடத்தப்படுகிறது என்பதைப் பற்றி ஒரு முடிவுக்கு வருவது சரியானது அல்ல என்பதே எங்களின் கருத்து. இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை எங்களால் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
குறிப்பாக, இந்த நடவடிக்கை ஒட்டுமொத்த இலங்கை ஊடகவியலாளர்கள் மற்றும் அனைத்து சர்வதேச ஊடகவியலாளர்களாலும் நிராகரிக்கப்பட வேண்டும் என்பதே ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடாகும்.
இதேவேளை இந்த விடயத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் தொடக்கம் என்ன, ஏன் இது நிகழ்ந்தது போன்ற தகவல்கள் வெளிக்கொணரப்பட வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகவும் என்றார்.
இதேவேளை இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறுகையில்,
உண்மையில், இதுவரை காலம் பாதுகாப்புத் துறையினர்தான் ஊடகவியலாளர்களைத் தாக்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. வரலாற்றில் வழக்கமாக நடக்கும் சம்பவம் அதுதான். ஆனால் இப்போது முதன்முறையாக ஊடகவியலாளர் ஒருவர் பாதுகாப்புப் பிரிவினர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இது முழு ஊடகத் துறைக்கும் ஒரு கறைபடிந்த சம்பவத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் இது ஒரு ‘சிறிய சம்பவம் என்கிறார். அப்படியானால் பெரிய சம்பவம் என்ன? என்று கேட்கின்றேன்.
கேகாலையில் பொலிஸ் உத்தியோகஸ்தரின் கண்ணைத் தோண்டியெடுத்தது போன்ற சம்பவங்களா பெரிய சம்பவங்கள்? அல்லது 88-89 காலப்பகுதியில் கழுத்தை அறுத்து கம்பத்தில் தொங்கவிட்டார்களே, அவையா பெரிய சம்பவங்கள்? அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமா? இது ஒரு சிறிய சம்பவம் என்றால், இத்தகைய சிறிய சம்பவங்கள்தான் நாட்டின் பாதுகாப்புச் சூழலை மிகவும் கொடூரமான நிலைக்குக் கொண்டு செல்லும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இதுவே தொடக்கம். அவர் திட்டமிட்டே இந்த வேலைக்கு வந்ததாக நினைக்கிறேன். இந்நேரம் வரை அவர் கைது செய்யப்படவில்லை. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருள் கூட வழக்குப்பொருளாகக் கைப்பற்றப்படவில்லை. சட்டப்படி எடுக்கப்பட வேண்டிய எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி, அந்த ஊடக நிறுவனம் இதற்காகக் வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. அப்படியானால் ஊடக தர்மம் என்பது எங்கே போயிற்று? அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சட்டப்பூர்வமான, ஒழுக்க ரீதியான நடவடிக்கை என்ன? பிறரின் தவறுகளைப் பற்றியும் ஊடக தர்மத்தைப் பற்றியும் பேசும் இவர்கள், தங்களின் ஊடக தர்மத்தைப் பற்றிப் பார்ப்பதில்லை.
அவர்களின் இலக்கு பாதுகாப்பு அதிகாரியா? அல்லது எதிர்காலத்தில் நமது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு நடத்தப்படவிருக்கும் தாக்குதலா? அல்லது அவருக்கு நடத்தப்பட்ட தாக்குதல் தவறுதலாகப் பாதுகாப்பு அதிகாரி மீது பட்டுவிட்டதா? இவை அனைத்தையும் பற்றி அரசாங்கம் முறையான விசாரணை நடத்தித் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என்றார்.
![]()