தையிட்டி விவகாரம்: ஐந்து வழக்குகள் விசாரணை; போராட்டம் தொடரும் என்கிறார் கஜேந்திரன்

தையிட்டியில் தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்து விகாரை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் விவகாரத்திற்கு எதிராக தொடர்ந்து போராடுவோம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
மக்களின் நியாயமான போராட்டத்தை முடக்குவதற்காக பொலிஸார் பொய் வழக்குகளைத் தாக்கல் செய்து அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் கஜேந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக (01) மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தையிட்டி விவகாரம் வெறுமனே காணி உரிமைக்கான போராட்டம் அல்ல எனக் குறிப்பிட்ட அவர், வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களின் வரலாற்று ரீதியான இருப்பையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாப்பதற்கான போராட்டம் என தெரிவித்துள்ளார்.
மேலும், சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையின் அடிப்படையில் செயற்படும் வகையில் சிறிலங்கா பொலிஸாரின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.
அரசாங்கத்தினதும் பொலிஸாரினதும் அடக்குமுறைகளுக்கு அஞ்சப் போவதில்லை எனத் தெரிவித்த கஜேந்திரன், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து அணிதிரள வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளார்.
![]()