தனிப்பட்ட இலாபத்திற்காகத் தனது நாட்டை காட்டிக் கொடுப்பவன் மிகவும் ஆபத்தானவன்

தன் சொந்த நாட்டை தனிப்பட்ட இலாபத்திற்காக காட்டிக்கொடுப்பவன் ஆபத்தானவன். காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தி பொய்யை பரப்புபவன் மிகவும் ஆபத்தானவன் என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் தொடர்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மகிந்த ராஜபக்ஷவினால் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதில் மகிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளதாவது,
வரலாற்றுச் சிறப்புமிக்க அனுராதபுரத்திலிருந்து நாங்கள் ஆரம்பித்து வைத்தது நமது தாய்நாட்டின் சுயகௌரவத்திற்கான மக்கள் போராட்டமாகும். எங்களுக்குச் சக்தியாக இருந்த அனைவருக்கும் எனது நன்றிகள்.
அனுராதபுர இராச்சியத்தின் வரலாறு நமக்கு ஒரு சிறந்த நாகரிகத்தின் வரலாற்றை நினைவூட்டுகின்றது. ஆக்கிரமிப்புகள், எதிர்ப்புகள், துரோகங்கள் மற்றும் வீழ்ச்சிகளுக்கு மத்தியிலும் மீண்டும் எழுந்து நின்ற வரலாறே அதுவாகும். கடந்த கால வரலாறு தற்போதைய காலத்திற்கும் பொருந்தும் என்று நான் நினைக்கிறேன். இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் தான் பிறந்த மண்ணின் மீது அன்பு இருக்க வேண்டும். நமது அடையாளம் என்ற உணர்வு இருக்க வேண்டும். ஒரு நாடாகப் பார்க்கும்போது, ஒரு நாட்டின் வெளியில் எதிரியை விட உள்ளே இருக்கும் எதிரியே மிகவும் ஆபத்தானவர் என்பது எனது நம்பிக்கையாகும். தன் சொந்த நாட்டை தனிப்பட்ட இலாபத்திற்காக காட்டிக்கொடுப்பவன் ஆபத்தானவன். காட்டிக்கொடுப்பை நியாயப்படுத்தி பொய்யைப் பரப்புபவன் மிகவும் ஆபத்தானவன்.
உங்கள் ஆதரவுடனும் பலத்துடனும் நான் நமது தாய்நாட்டைப் பாதுகாத்து கட்டியெழுப்பினேன். நமது மக்கள் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் வாழும் ஒரு யுகத்தை மீண்டும் கட்டியெழுப்புவதே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நோக்கமாகும் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த காலத்தைப் போலவே நமது கலாச்சாரம், அடையாளம் மற்றும் தேசியத்தைப் பாதுகாத்து அபிவிருத்தியடைந்த ஒரு தேசத்தைக் கட்டியெழுப்ப உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.
இந்த நிகழ்வைச் சிறப்பாக ஏற்பாடு செய்த அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகா சங்கத்தினருக்கும் ஏனைய சமயப் குருமார்களுக்கும் வணக்கத்துடன் கூடிய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பழைய அரசியல் தோழர்களுக்கும் புதிய நம்பிக்கைகளுடன் வருகை தந்த புதிய இளம் அரசியல்வாதிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
குறிப்பாக அனுராதபுர நகரத்திற்கு வருகை தந்த எமது அன்பான, தாய்நாட்டை நேசிக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன். நிலவும் அதிக வெப்பமான வானிலையிலும் கூட, சிரமங்களைப் பொறுத்துக் கொண்டு நீங்கள் அனைவரும் அங்கிருந்ததை நான் கண்டேன். நீங்கள் அனைவரும் பல கடினமான சூழ்நிலைகளைத் தாங்கிக் கொண்டீர்கள் என்பதை நான் அறிவேன். ரஜரட்ட மக்களுக்கு நன்றி. எப்போதும் எங்களுக்குச் சக்தியாக இருக்கும் இலங்கை வாழ் மக்களுக்கு நன்றி. மிகவும் கடினமான காலங்களில் கூட நீங்கள் தரும் மக்கள் அன்பிற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.
![]()