இலங்கை

ஜெனீவா பேரவைத் தீர்மானத்தின் பிரதான விடயத்திற்கு இணங்கவில்லை; இதனை முன்னரும் நாங்கள் தெளிவாக கூறினோம்;  இந்த முறையும் கூறுவோம் 

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய பொறிமுறையை ஏற்கனவே நாட்டில் அரசாங்கம் செயற்படுத்தி வருகின்றது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள எழுத்துமூல அறிக்கை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜெனிவாவில் 63 ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. அங்கு மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தினால் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட ஊழல், மோசடிகள் காரணமாக பொருளாதார ரீதியில் நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர் என்றும் இதன்மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமை மீறல்கள் நடந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் டித்வா புயல், மத்திய கிழக்கு யுத்தம் காரணமாகவும் நாட்டு மக்கள் பாதிப்பை எதிர்நோக்கினர் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த காலங்களில் ஊழல் மோசடிகளை தடுப்பதற்காக எங்களால் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பில் சாதகமான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்துடன் பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல் செய்வது தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே எமது அரசாங்கம் அதனை இல்லாமல் செய்வதற்கு தேவையான பணிகளை ஆரம்பித்துள்ளது.

அறிக்கையை முழுமையாக எடுத்துக்கொண்டால், கடந்த இரண்டு வருட காலங்களில் எமது நாடு இனவாதம், மதவாத மோதல்கள் இன்றி நாட்டை முன்னெடுப்பது தொடர்பிலும் ஆணையாளரின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு பாராட்டப்பட்டுள்ளது.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இரண்டு தடவைகள் கலந்துகொண்டு அரசாங்கத்தின் நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளேன். ஆனால் தற்போது மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை தொடர்பில் எழுத்து மூல அறிக்கையை முன்வைத்துள்ளார். அதற்கு விளக்கமளிக்க 5 நிமிடங்களே வழங்கப்படும். ஜெனிவாவில் உள்ள எமது நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான சுமித் தசநாயக்க எமது அரசாங்கத்தின் நிலைப்பாட்டை முன்வைக்கின்றார். இங்கு பொது விவாதமே நடக்கின்றது. அது இலங்கை தொடர்பாக மட்டுமன்றி பல்வேறு நாடுகள் தொடர்பானது. இதனால் இம்முறை அமைச்சராக நான் கலந்துகொள்வது அவசியமில்லை. எமது நிரந்தர வதிவிடப் பிரதிநிதி எமது நிலைப்பாடுகளை முன்வைப்பார்.

எவ்வாறாயினும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடரில் நான் கலந்துகொள்வேன். எதிர்வரும் 26 ஆம் திகதி புறப்பட்டு செல்லவுள்ளேன். 28 ஆம் திகதி அங்கு உரையாற்றுவேன். கடந்தமுறை ஜனாதிபதி கலந்துகொண்டார். இம்முறை வெளிவிவகார அமைச்சராக நான் கலந்துகொள்வேன்.
அத்துடன் மனித உரிமைகள் பேரவையில் எமது நிரந்தர வதிவிடப் பிரதிநிதி வழங்கிய எமது தரப்பு பதில்களை நாட்டு மக்களுக்கு தெரிந்துகொள்ள வெளியிடுவோம். மனித உரிமைகள் பேரவையினால் இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள தீர்மானத்தில் பிரதான விடயத்திற்கு நாங்கள் இணங்கவில்லை. இதனை நாங்கள் மிகவும் தெளிவாக இதற்கு முன்னரும் கூறினோம். இந்த முறையும் கூறுவோம். எமது எதிர்ப்பை நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம்.

இதேவேளை தேசிய பொறிமுறையை நாங்கள் செயற்படுத்துகின்றோம். அதன்படிதான் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குகின்றோம். காணிகள் விடுவிக்கப்படுகின்றன. வடக்கு, கிழக்கில் பாதுகாப்பு காரணங்களுக்காக பெற்றுக்கொள்ளப்பட்ட 250க்கும் அதிகமான காணிகளை கடந்த இரண்டு வருடங்களில் விடுவித்துள்ளோம். பலாலி விமான நிலையத்திற்காக பெற்றுக்கொள்ளப்பட்ட காணிகள் தொடர்பில் மீளாய்வு செய்து வர்த்தமானி மூலம் கையகப்படுத்தீய நாளில் இருந்து உரிய நஷ்ட ஈட்டை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு புதிதாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ரீதியில் அலுவலகங்களை அமைத்து அதிகாரிகளை நியமித்து காணாமல் போனோரை கண்டறியும் பணிகளை துரிதப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக தேசிய பொறிமுறை இப்போது செயற்படுத்தப்படுகின்றது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *