ஈரானின் 5 எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்

அமெரிக்கப் போர்க்கப்பலை ஈரான் இருமுறை தாக்கியதற்குப் பதிலடியாக, அந்நாட்டின் ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் (Centcom) தெரிவித்துள்ளது.
ஓமன் வளைகுடாவில் ஈரானிய புரட்சிகர காவல் படையுடன் (IRGC) தொடர்புடைய நான்கு எண்ணெய் தாங்கிக் கப்பல்களும், ஈரானின் முக்கிய எண்ணெய் முனையமான கார்க் தீவுக்கு அருகே மற்றொரு கப்பலும் இலக்கு வைக்கப்பட்டன.
இதற்குப் பதிலடியாக ஜோர்தானில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தை நோக்கி ஈரான் ஏவுகணைகளை வீசித் தாக்கியது. இருப்பினும், ஈரான் செலுத்திய 20 ஏவுகணைகளில் 18 ஏவுகணைகளைத் தனது வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் சுட்டு வீழ்த்தியதாக ஜோர்தான் பின்பு அறிவித்தது.
கடந்த பெப்ரவரி 28 அன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்களைத் தொடங்கிய ஆறு மாதங்களுக்குப் பிறகு, கடந்த வாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பரத் தாக்குதல்கள் மேலும் தீவிரமடைந்துள்ளன. இந்த மோதல்கள் காரணமாக ஆசியாவின் ஆரம்ப வர்த்தகத்தில் கச்சா எண்ணெய் விலைகள் உயர்வடைந்தன.
அமெரிக்கக் கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டால், குவைத் மற்றும் பஹ்ரைன் துறைமுகங்களுக்கு அருகில் உள்ள எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மீது மேலதிகப் பதில் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
துறைமுகங்களில் அல்லது நங்கூரமிட்டுள்ள அமெரிக்காவுடன் தொடர்புடைய அனைத்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களின் ஊழியர்களும் உடனடியாக வெளியேறுமாறு ஈரானிய புரட்சிகர காவல் படை கேட்டுக்கொண்டுள்ளது.
ஈரான் நடத்திய பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கக் கடற்படைக் கப்பல் வெற்றிகரமாகத் தவிர்த்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அமெரிக்க வீரர்கள் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று மத்திய கட்டளையகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தாக்கப்பட்ட ஐந்து எண்ணெய் தாங்கிக் கப்பல்களும் ஈரானிய புரட்சிகர காவல் படைக்கும் அதன் பிராந்திய அமைப்புகளுக்கும் நிதியளிக்கும் பில்லியன் டொலர் நிழல் வலையமைப்பின் ஒரு பகுதி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க ஈரான் முயலும் போதெல்லாம், அவர்கள் தங்கள் எண்ணெய் தாங்கிக் கப்பல்களை இழக்க நேரிடும் என அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ குறிப்பிட்டுள்ளார்.
![]()