இலங்கை

NPPஆட்சியில் சிறந்த வெளிவிவகாரக் கொள்கை கடைபிடிப்பு

“அனைத்து நாடுகளுடனும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது. சர்வதேச அரங்கில் இலங்கை தனிமைப்படுத்தப்படவில்லை” என்று ஜே.வி.பியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:

“தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் சர்வதேச தொடர்புகள் இருக்காது என்றும், நாடு தனிமைப்படுத்தப்படும் என்றும் தேர்தல் காலத்தில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் இன்று அனைத்து நாடுகளுடனும் எமது அரசாங்கம் சிறந்த உறவைப் பேணி வருகின்றது.

தெற்காசியாவில் அனைத்து நாடுகளும் நேசிக்கும் ஒரே நாடாக இலங்கை மாறியுள்ளது என அண்மையில் சர்வதேச நிறுவனமொன்று நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றார்கள். ஆனால், இன்று மக்கள் அச்சமின்றி வாழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவ்வாறு எதிரணியினர் கூறிய மற்றும் உருவாக்கிய போலியான பிம்பங்கள் அனைத்தையும் நாம் பொய்யென நிரூபித்துள்ளோம்.

நாட்டில் இன்று அனைத்து இன மக்களும் அச்சமின்றி வாழும் சூழ்நிலை நிலவுகிறது. மாறாக, எதிரணி தரப்பிலேயே இனவாதத்தைத் தூண்ட முற்படுகின்றனர்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஜனநாயகத்தை மதித்தே செயல்படுகின்றது. அரசியல் எதிராளிகளை நாம் ஒடுக்கவில்லை. ஆனால், மக்கள் பணத்தைக் களவாடியவர்கள் நிச்சயம் சிறைச்சாலைக்குச் செல்ல நேரிடும். ஊழல், மோசடிகளைத் தடுக்கவும், குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்குச் சட்ட ரீதியாகத் தண்டனை பெற்றுக்கொடுக்கவுமே மக்கள் எமக்கு ஆணையளித்துள்ளார்கள்.”என்றார் ரில்வின் சில்வா.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *