இலங்கை குறித்த ஐ.நா. அறிக்கை – கடன் சுமை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கவலை!

சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63வது அமர்வின் இரண்டாம் நாளான இன்று, இலங்கை தொடர்பான மானித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் 16 பக்கங்களைக் கொண்ட புதுப்பிக்கப்பட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை விரைவாக ரத்து செய்தல், அச்சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவித்தல், இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள வடக்கு-கிழக்கு நிலங்களை விடுவித்தல், நீதிபதிகளின் பதவிக் காலம் மற்றும் நீதித்துறை அமைப்பை அரசியல் செல்வாக்கின்றிப் பேணுதல் போன்றவை இந்த அறிக்கையின் பரிந்துரைகளில் அடங்கும்.
இந்த அறிக்கை குறித்து மனித உரிமைகள் பிரதி உயர்ஸ்தானிகர் ஆவா டாபோ (Ava Dabo) பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்:
“இலங்கை பல கடுமையான பிரச்சினைகளை எதிர்கொண்டது. அதில் பிரதானமானது நாடு எதிர்கொண்டுள்ள கடன் சுமையாகும். 2026 வரவுசெலவுத் திட்டத்தின்படி, அரசின் வருவாயில் 82% கடன் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது சுகாதாரம், கல்வி மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காகச் செலவிடப்படும் மொத்தத் தொகையைப் போல இருமடங்காகும். இது ஒரு மனித உரிமைப் பிரச்சினையாகும். நாட்டிற்கு விரைவான வளர்ச்சி உதவி தேவைப்படுகிறது. மாற்றத்திற்கான வாய்ப்பு இன்னமும் உள்ளது. உண்மையான பொறுப்புக்கூறல் மற்றும் தேசிய நல்லிணக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்க எங்கள் அலுவலகம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளது.”
இந்த அறிக்கை தொடர்பில் ஐநா அலுவலகத்திற்கான இலங்கையின் தூதுவர் சுமித் தசநாயக்க தனது பதிலளிப்பை வழங்கினார்:
“வெளிப்புற சான்றுகளைச் சேகரிக்கும் பொறிமுறையை இலங்கை நிராகரிக்கிறது. கடந்த ஆண்டில் நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகளை உறுதிப்படுத்த அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிற சர்வதேச தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்று, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய சட்ட மூல வரைவை அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளது.
இணையவ பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் மற்றும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் ஆகியவை தொடர்ந்து இயங்கி வருகின்றன.
உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பொறிமுறையும் திருத்தப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் சுயாதீன சட்டமா அதிபர் அலுவலகத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நிலங்களை விடுவித்தல், மதிப்பீடு மற்றும் இழப்பீடு வழங்குதல் குறித்து ஆராய அமைச்சரவைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதீனத்தைப் பேணவும் சட்ட அணுகலை எளிதாக்கவும் அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. நீதித்துறை செயல்பாட்டின் தாமதத்தைத் தவிர்க்கவே அனைத்து நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் புதிய சட்ட விதிகள் கொண்டுவரப்படுகின்றன.”
![]()