இலங்கை

சபையில் கைது குறித்து வாய் திறக்காத நாமல் ராஜபக்ஷ!; அநுரவை சாடி சரமாரி உரை

சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றி நாமல் ராஜபக்ஷ, தமது கைது அல்லது நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பில் எவ்வித கருத்தையும் முன்வைக்காது , நாட்டின் பொருளாதார நெருக்கடி, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் அரசாங்கத்தின் நிர்வாகச் செயற்பாடுகள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்தார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நமால் ராஜபக்ஷ, சிறைக்காவலர்களின் பாதுகாப்புடன் இன்று (08) நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போது, தற்போதைய அரசாங்கத்தின் தேர்தல் வாக்குறுதிகள், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்தார்.

அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சுங்கத்துறை மூலம் அதிகளவு வருமானம் கிடைத்துள்ளதாக பெருமை பேசப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் 323 கொள்கலன்கள் ஊடாகவே இந்த வருமானம் கிடைத்ததாக குற்றஞ்சாட்டினார்.

மேலும், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட எந்தவொரு முக்கிய வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு ஒரு கிலோ நெல்லுக்கு 150 ரூபாய் வழங்கப்படும் என தேர்தலுக்கு முன்னர் உறுதியளித்தவர்கள், தற்போது விவசாயிகளை கைவிட்டுள்ளதாகவும் நமால் ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

தற்போது ஈர நெல் கிலோ 80 முதல் 85 ரூபாய் வரையிலும், உலர் நெல் கிலோ 90 முதல் 95 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாகவும், அரசாங்கம் உரிய முறையில் நெல்லைக் கொள்முதல் செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அதேவேளை, வெளிநாடுகளில் இருந்து 4 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

‘எல் நினோ’ மற்றும் ‘தித்வா’ புயல் போன்ற பாதிப்புகளுக்கு முன்னர் முறையான திட்டமிடல்கள் மேற்கொள்ளப்படாததால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

நாடு முழுவதும் 74 பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 34 சதவீதமாகக் குறைந்துள்ளதாகவும், பல கிராமங்களில் 20 முதல் 25 நாட்களுக்கு ஒருமுறை மாத்திரமே குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

50 பல்கலைக்கழகங்களை உருவாக்குவோம் என உறுதியளித்த அரசாங்கம், தற்போது ஒரு பாடசாலைக் கட்டிடத்தின் இரண்டாவது மாடியைக் கட்டுவதற்குக் கூட அடிக்கல் நாட்டிவிட்டு புத்தாண்டு வரை காத்திருப்பதாகவும் நமால் ராஜபக்ஷ விமர்சித்தார்.

மேலும், நாட்டில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்காமல் நேபாளத்திற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக அரசாங்கம் கூறுவது தொடர்பிலும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதுபோன்ற பொய் வாக்குறுதிகளை வழங்கி சர்வதேச ரீதியில் நாட்டின் நற்பெயருக்கு பாதிப்பு ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.

நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களை நியமிப்போம் எனக் கூறி ஆட்சிக்கு வந்த அரசாங்கம், தற்போது அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) முரண்பட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

இறுதியில் ஜனாதிபதி மக்களை ‘கொத்தமல்லி குடித்துவிட்டு வீட்டில் இருக்குமாறு’ கூறும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் நமால் ராஜபக்ஷ தெரிவித்தார்.

மக்கள் எதிர்கொள்ளும் கடுமையான வாழ்க்கைச் செலவைக் குறைப்பதற்கும், கிராமப்புற பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *