இலங்கை

”ஏர்பஸ்”மோசடி ஒரு தேசிய குற்றம்  தொடர்புபட்டோர்  தப்பிக்கக் கூடாது

ஏர்பஸ் கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற மோசடிகளுக்கு பொறுப்பு கூற வேண்டிய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.எவரும் தப்பிக்கக்கூடாது இந்த விடயத்தில் ஜனநாயக ரீதியாக சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்று  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

கடவத்த மெட்ரோ டிப்போ வளாகத்தின் செயல்பாடுகளை நேற்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டிருந்த அமைச்சரிடம், நாமல் ராஜபக்‌ஷவின் கைது விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் இலங்கையின் ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அடித்தது அந்த ஏர்பஸ் ஒப்பந்தம்தான். ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் விவகாரம் தொடர்பில் லண்டன் வர்த்தக உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்றது. இலங்கைக்கும் இந்த ஏர்பஸ் வாங்கப்பட்ட இந்தோனேசியா போன்ற நாடுகளுக்கும் இடையே ஏர்பஸ் கொள்முதலின் போது ஏர்பஸ் நிறுவனம் ஏதோ ஒரு மோசடியில் ஈடுபட்டுள்ளது என்ற அடிப்படையில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் வழக்குத்  தொடரப்பட்டது.

லண்டன் உயர் நீதிமன்ற வழக்கின் மூலம்தான் சில வருடங்களுக்கு முன்பு, இந்த ஏர்பஸ் பரிவர்த்தனையின் போது இலஞ்சம் மற்றும் தரகுப் பணம் கொடுக்கப்பட்டது நிரூபணமானது. அதன் அடிப்படையில் கடந்த 7, 8 ஆண்டுகளுக்கு முன்பு இது தொடர்பான உண்மைகள் வெளிவந்து விசாரணைகள் தொடங்கப்பட்டன.

ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போது 16 மில்லியன் டொலர் இலஞ்சமாகப் பெறப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்வதற்காக, 2016-இல் 110 மில்லியன் டொலர் நஷ்ட ஈடாகச் செலுத்தப்பட்டது. அந்த நஷ்ட ஈட்டிலும் தரகுப் பணம் மற்றும் இலஞ்சம் பெறப்பட்டுள்ளது.

அதாவது ஏர்பஸ் விமானங்களை வாங்கும் போதும் திருடினார்கள்; அந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யும் போதும் திருடினார்கள். இதனால்தான் இலங்கையின் விமான சேவை சீரழிந்தது. இது ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் மற்றும் நமது நாட்டின் புகழுக்கு இழைக்கப்பட்ட ஒரு தேசிய குற்றம். ஆசியாவின் பழமையான விமான சேவைகளில் ஒன்றான நமது விமான சேவையை சீரழித்தது இந்தத் திருட்டுகள்தான்.

எனவே, இதற்குப் பொறுப்பு கூற வேண்டிய ஒரு சிலர் மீது மட்டுமல்ல, சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது சர்வதேச அளவில் நிரூபிக்கப்பட்ட ஒரு விடயம். இதில் தனிப்பட்ட பழிவாங்கல் எதுவும் இல்லை. சர்வதேச நீதிமன்றங்களிலும், பிரான்ஸ் ஏர்பஸ் நிறுவனம் இங்குள்ள ஊழல் எதிர்ப்பு அமைப்பிடம் சாட்சியமளித்து நிரூபிக்கப்பட்ட ஊழல் மோசடி . இந்த விடயத்தில் நாங்கள் எவரையும் பழிவாங்கவில்லை. ஜனநாயக ரீதியாகச் சட்டத்தை சரியாக நடைமுறைப்படுத்துகிறோம்.

எதிர்க்கட்சிகள் கூச்சலிடுவது அவர்களின் வேலை. நாங்கள் நல்ல காரியங்களைச் செய்யும் போது அவர்கள் கூச்சலிடத்தான் செய்வார்கள்.  நீதித்துறைச் சீர்திருத்தங்கள் குறித்துப் பேசும் போது எதிர்க்கட்சிகள் எங்கள் மீது பொய்ப் பிர சாரங்களைச் செய்கின்றன. ஆனால் நாங்கள் அதைப் பொருட்படுத்தாமல் எங்கள் மறுசீரமைப்புப் பணிகளைத் தொடர்ந்து செய்வோம் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *