ஜனாதிபதியின் கூட்டத்திற்குள் புகுந்த பாம்பையே தடுக்க முடியாத அரசு; இதுதான் தேசிய பாதுகாப்பு என்கின்றார் திஸ்ஸ

தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறும் அரசாங்கம், ஜனாதிபதியின் கூட்டத்தை வீதிகளை மூடி ஆயிரக் கணக்கான பொலிஸாரை பயன்படுத்தி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடத்துகின்றது. ஆனால் பேருவளை கூட்டத்தில் அத்தனை பாதுகாப்பையும் தாண்டி கூட்ட மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்ததை தடுக்க முடியவில்லை. இவர்களின் தேசிய பாதுகாப்பும் இவ்வாறுதான் இருக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி பேருவளையிலும் புளத்சிங்களையிலும் இரண்டு பிரதான பிர சாரக் கூட்டங்களை நடத்தினார். ஏன் இந்த இரண்டு பிர சாரக் கூட்டங்களை நடத்தினார்? அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த நாட்டின் மக்களுக்கு நிறைவேற்றிய வாக்குறுதிகளை நினைவுபடுத்துவதற்கா அல்லது மக்கள் நலன் சார்ந்த தேசிய வேலைத்திட்டம் ஒன்றைச் செயல்படுத்தினோம் என்று சொல்வதற்கா அல்லது அவர்கள் இலக்குகளை அடைந்துவிட்டதாக மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் விளக்குவதற்கா?
ஆனால் இந்த இரண்டு பிர சாரக் கூட்டங்களிலும் நாம் கண்டது என்னவென்றால், மீண்டும் பழைய பொய்களையே மக்கள் மத்தியில் கொண்டுசேர்க்க ஜனாதிபதி மிகவும் சிரமமான முயற்சியில் ஈடுபட்டார் என்பதாகும். ஏனெனில் அரசாங்கத்தின் மீது மக்களுக்கு பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி உணர்ந்துள்ளார். இதன் காரணமாக ஜனாதிபதி தனது செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள மக்கள் மத்தியில் சென்று மேலும் சில பொய்களைக் கூறுவதற்காக இந்தக் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தார்.
பேருவளையில் கூட்டம் நடந்தபோது, பேருவளையிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அசாதாரண பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, வழக்கம் போல் கடலுக்குச் செல்லும் மீனவர்கள் தங்களது மீன்பிடித் துறைமுகத்திற்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்ததுதான் மிகவும் கொடூரமானது.இந்த நிலைமையில் தேசிய பாதுகாப்பில் கடுமையான கேள்விக்குறி உருவாகியுள்ளது என்பதை இல்லை என்று கூற முடியாது. தினசரி துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த சில மாதங்களில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள், 17 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை ஜனாதிபதி வீதிகளை மூடி, ஆயிரக்கணக்கான பொலிஸாரைப் பயன்படுத்தி, பலத்த பாதுகாப்பிற்கு மத்தியில் கூட்டங்களை நடத்த வேண்டியிருந்தால், தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக எப்படிக் கூற முடியும்?தேசிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை, இருண்ட காலம் முடிந்துவிட்டது, எல்லாம் சிறப்பாக உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது. ஆனால், மக்களுக்குப் பொய் கூறி ஏமாற்றியதால் ஏற்படும் மக்கள் கொந்தளிப்பிலிருந்து தப்பிப்பதற்காகவே ஜனாதிபதி கதவுகளை மூடிக்கொண்டு கூட்டம் நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
அவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கூட்ட மைதானத்திற்குள் சாரைப் பாம்பு புகுந்ததால் நடந்த நாடகத்தை நாம் பார்த்தோம். தேசிய பாதுகாப்பைப் பற்றிப் பேசும் இவர்கள், கூட்ட மைதானத்திற்குள் ஒரு பாம்பு நுழைவதைக் கூடத் தடுக்க முடியவில்லை. இவ்வாறான நிலைமையில் தேசிய பாதுகாப்பின் நிலைமை எப்படியிருக்கும் என்றார்.
![]()