இலங்கை

கறுப்பு இராஜ்ஜியத்தை உடைத்து சுத்தப்படுத்தும் பணி ஆரம்பம்;  நாம் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் மீளப் பெற மாட்டோம்

கறுப்பு இராஜ்ஜியத்தை உடைத்து சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.அப்போதே உரிய குற்றங்களுக்கு தண்டனைகளை வழங்கியிருந்தால் இப்போது இந்தளவுக்கு பட்டியல் உருவாகியிருக்காது.இந்த பட்டியலை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. எனவே வேகமாக இதனை செய்ய வேண்டியுள்ளது. நாங்கள் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் மீளப் பெற்றுக்கொள்ள மாட்டோம். 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுப்போம்எ ன ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைக்கப்பட்டு 2 வருடங்கள் பூர்த்தியவதை முன்னிட்டு “எமது அரசாங்கத்திற்கு இரண்டு ஆண்டுகள் – நாட்டிற்குச் சுபிட்சம்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டத் தொடரின் முதலாவது கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள நகரில் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் பேசுகையில்,

எம்மிடம் நிறைவேற்று அதிகாரம் இருப்பதும், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதும், உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையான சபைகள் இருப்பதும் எமக்கு பெரிய பலம். ஆனால் தேசிய மக்கள் சக்தியின் பிரதான பலம் மக்களிடமே இருக்கின்றது. இதனாலேயே நாங்கள் அரசாங்கத்தை ஓரு பக்கத்தில் முன்னெடுத்துச் செல்வதுடன் தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்தும் பணியை மறுபுறத்தில் முன்னெடுத்துச் செல்கின்றோம். கறுப்பு இராஜ்ஜியத்தை இல்லாமல் செய்வதற்காக நீங்களே எதிர்பார்ப்புடன் இருக்கின்றீர்கள். அதற்காக நீங்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை மீதோ, நிறைவேற்று அதிகாரத்தின் மீதோ நம்பிக்கை வைக்கத் தேவையில்லை. இதற்கு முன்னரும் இவ்வாறு அதிகாரங்களை கொண்டவர்கள் இருந்தார்கள். தேசிய மக்கள் சக்தியை பலப்படுத்த வேண்டும். அதற்காகவே நாங்கள் இந்த கூட்டங்களை நடத்துகின்றோம். நாங்கள் கறுப்பு இராஜ்ஜியத்தை சுத்தப்படுத்தும் பணிகளை ஆரம்பித்துள்ளோம்.

ஒரு காலத்தில் சட்டம் இருக்கவில்லை. கறுப்பு இராஜ்ஜியம் நாடு முழுவதும் இருந்தது. திருடன், பொலிஸ் விளையாட்டு நடந்தது. ஒரு அரசாங்கம் வந்த பின்னர் அந்த அரசாங்கம் எதிர் தரப்பை திருடன் என்று கூறும். அப்போது அவர்கள் பொலிஸார், பின்னர் மற்றைய தரப்பு அரசாங்கத்திற்கு வந்த பின்னர் அவர்கள் பொலிஸாகி மற்றைய தரப்பு திருடனாகும். இவ்வாறுதான் திருடன் பொலிஸ் விளையாட்டு இருந்தது. இதனால் திருடுவதற்கு அஞ்சவில்லை. ஊழல் மோசடிக்கு அஞ்சவில்லை. இவ்வாறு இவர்கள் திருடன் பொலிஸ் விளையாட்டில் ஈடுபட்டு ஒன்றாக நண்பர்களாக இருந்தனர். ஆனால் வேறு குழுவொன்று பொலிஸாக மாறும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அதுவே நடந்த பிரச்சினையாகியுள்ளது.

விளையாட்டாக பார்க்கப்பட்ட திருடன் ,பொலிஸ் நிலைமை இப்போது உண்மையாக மாறியுள்ளது. அப்போதே உரிய குற்றங்களுக்கு தண்டனைகளை வழங்கியிருந்தால் இப்போது இந்தளவுக்கு பட்டியல் உருவாகியிருக்காது. கடந்த 15, 20 வருட காலத்திற்கானவை இப்போது தேங்கிக் கிடக்கின்றன. இதனை தீர்க்கப் போகும் போது தினமும் பிடிபடுகின்றனர். இதனை மேலும் நீடிக்க இடமளிக்க முடியாது. சிலரை 20 வருடங்கள் கடந்துவிட்டால் காலாவதியான சட்டத்தின்படி உள்ளே போட முடியாது. இதனால் வேகமாக இதனை செய்ய வேண்டியுள்ளது. இதற்காக வேகமாக செய்யும் போது அவர்கள் பிடிபடுவர். இவ்வாறுதான் ஊழல் மோசடி நிலைமை இருந்துள்ளது. இதுவே இந்த நாடு அழிவதற்கு காரணம். இந்த கறுப்பு இராஜ்ஜியத்தை சுத்தப்படுத்த வேண்டும். அதனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் மட்டுமே செய்ய முடியும்.

இதேவேளை சட்டம் முழுமையாக வீழ்ச்சியடைந்திருந்தது. சில வழக்குகள் 2016இல் தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் இப்போது 10 வருடங்களாகியும் ஒரு சாட்சியேனும் விசாரிக்கப்படவில்லை. அலுவலக பணியாளர் பற்றாக்குறை, அரசியல் பலம், சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை மீளப் பெற்றுக்கொண்டமை உள்ளிட்ட சில காரணங்களுக்காக அவை இழுத்தடிக்கப்பட்டன. இப்போது சிக்கியிருந்த பெருமளவான வழக்குகள் உள்ளன. இதனை துரிதப்படுத்த வேண்டும். இதனால் வரும் ஜனவரியில் பொலிஸாருக்கு விசேட கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்க்கின்றோம்.அதேபோன்று இரசாயன பகுப்பாய்வு அறிக்கைகளை வேகப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. விசேட நீதிமன்றங்களை அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். எப்போதாவது தீர்ப்பை வழங்குவதில் பலனில்லை. சம்பவம் நினைவில் இருக்கும் காலத்தில் அதனை செய்ய வேண்டும்.

இதற்கு தேவையான அரசியலமைப்பு திருத்தத்தையும் நாங்கள் கொண்டுவருவோம். நாங்கள் எடுக்கும் எந்தத் தீர்மானத்தையும் மீளப் பெற்றுக்கொள்ள மாட்டோம். 22ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் அதனை நிறைவேற்ற தேவையான நடவடிக்கை எடுப்போம். இவ்வாறுதான் கறுப்பு இராஜ்ஜியத்தை உடைக்க முடியும். நாங்கள் வெளியில் இருந்து எவ்வளவு கதைத்தாலும் உள்ளே போய் பார்த்தால் ஒருவரும் மிஞ்சாத வகையிலேயே பிரச்சினை உள்ளது. இதனால் இந்த கறுப்பு இராஜ்ஜியத்தை சுத்தப்படுத்த வேண்டும்.

உலகின் புள்ளி விபர பட்டியலில் அதிகளவில் ஊழல் நடக்கும் நாடுகளின் பட்டியலை நோக்கியே எமது நாடு பயணித்தது. அமைதியில் வீழ்ச்சியடைந்தும். பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தும் இந்த நாடு இருந்தது. எமது நாடு மிகவும் தரக்குறைவான நாடாகவே இருந்தது. கெட்ட விடயங்களுக்கு எமது நாடு சர்வதேசத்தின் மத்தியில் முன்மாதிரியாகவே இருந்தது. ஆனால் இப்போது அந்த நிலைமை மாறியுள்ளது. இப்போது அமைதியான நாடாகவும், பொருளாதாரத்திலும் வேகமாக முன்னால் வரும் நாடாக இருக்கின்றது. சர்வதேச ரீதியில் நற்பெயர் உருவாகி வருகின்றது. நாங்கள் தேவையான நேரங்களில் முறையாக ஆராய்ந்து தீர்மானங்களை எடுத்தோம். எமது நாட்டின் இறைமையாண்மை மற்றும் கௌரவரத்தை பாதுகாக்கும் வகையிலேயே தீர்மானங்களை எடுத்தோம். இவ்வாறு கறுப்பு இராஜ்ஜியத்தை மாற்றியமைத்துள்ளோம்.

இதேவேளை இனவாதம் என்ற கறுப்பு அரசியலையும் கடந்த காலங்களில் முன்னெடுத்தனர். இருதரப்பும் பணம் கொடுத்து இனவாத பிரசாரங்களை முன்னெடுத்து இனங்கள் மோதிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கினர். ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் நிலைமை ஏற்பட்டிருந்தது. ஆனால் இப்போது இனவாத மோதல் தொடர்பில் எந்தவொரு முறைப்பாடும் இல்லாத காலமாகவே கடந்த இரண்டு வருடங்கள் இருந்துள்ளன.

இந்நிலையில் போதைப் பொருள் மற்றும் பாதாள குழுக்கள் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது. அதற்காக பெருமளவு பணம் பயன்படுத்தப்படுகின்றது. அரசியல்வாதிகள் இதற்காக பணத்தை வாரி இறைத்தனர். இதனால் அவர்கள் அரசில் முக்கிய இடங்களில் தீர்மானம் எடுக்கக்கூடியவர்களாக இருந்தனர். பாதாள குழுவினர் நாட்டில் பல்வேறு தரப்பினரை அச்சுறுத்தி பெற்றுக்கொண்ட சொத்துக்கள் உள்ளன. வெள்ளவத்தையில் கடலோரத்தில் இந்த நிலைமை உள்ளது. இவ்வாறான இடங்களை நாங்கள் மீட்க வேண்டும்.

அத்துடன் கடந்த காலங்களில் பெருமளவில் ஹெரோயின், கொக்கையின், ஐஸ் போன்ற போதைப் பொருட்களை மீட்டுள்ளோம். இந்த நாடு பேரழிவுக்குள் தள்ளப்பட்டிருந்தது. நாங்கள் பெருமளவில் ஆயுதங்களையும் மீட்டுள்ளோம். பொலிஸ் நிலையங்களை விடவும் பெருமளவான ஆயுதங்கள் பாதாள குழுக்களிடம் இருக்கின்றன. இப்போது வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பாதாள குழுக்களை சேர்ந்தவர்களைள கைது செய்து நாட்டுக்கு கொண்டு வருகின்றோம். இவர்களால் பேரழிவுக்கு இடமளிக்க முடியுமா?

இப்போது எமது வேலைத்திட்டங்களுக்கு எதிர்ப்பவர்கள் யார்? கறுப்புபொருளாதாரத்திற்குள் புகுந்தவர்களும், டொலர்களை நாட்டில் இருந்து வெளியேற்றுபவர்களும், முறையற்ற அரசியல் கலாசாரத்தை கொண்டவர்களும், ஊழல் மோசடியில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் இருந்து தப்பியிருப்பவர்களும், சர்வதேசத்தின் மத்தியில் எமது நாட்டை கறுப்பு நாடாக கட்டிக்கொடுத்தவர்கள், போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எதிர்ப்பவர்களே எமக்கு எதிராக இருக்கின்றனர். இவர்கள் மக்களின் பக்கம் இருப்பவர்கள் இல்லை. கறுப்பு இராஜ்ஜியத்தின் பக்கம் இருப்பவர்களே ஆகும். இந்த கறுப்பு இராஜ்ஜியத் தை வைத்தக்கொண்டு நாட்டை முன்னேற்ற முடியாது. இந்த கறுப்பு இராஜ்ஜியத்தை உடைக்க வேண்டும். பல தசாப்தங்களாக எமக்கு தெரியாமல் உள்ளேயே இந்த அழிவுகள் நடந்துள்ளன. இதில் இருந்து நாட்டை மீட்டெடுக்கவே மக்கள் எங்களை தெரிவு செய்துள்ளனர் என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *