இலங்கை

நாமலுக்கு பதிலாக களமிறங்கும் மஹிந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் 12ஆம் திகதி அநுராதபுர நகரில் நடத்த திட்டமிட்டுள்ள பொதுக் கூட்டம் நிச்சயமாக நடைபெறும் .அதில் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ கலந்துகொள்வார் என்று முன்னாள் அமைச்சரும் அந்தக் கட்சியின் செயற்பாட்டுத் தலைவருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தை கட்சியின் தேசிய அமைப்பாளரான பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்‌ஷ தலைமையில் நடத்துவதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், அவர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதால் மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் அந்தக் கூட்டத்தை நடத்துவதற்கு கட்சியினர் எதிர்பார்த்துள்ளனர்.

மகிந்த ராஜபக்ஷ இதில் கலந்து கொள்ளவுள்ள போதிலும், அவர் உரையாற்றுவதற்காக பிரதான மேடையில் ஏறாமல், மேடைக்கு முன்னால் உள்ள மக்கள் மத்தியிலோ அல்லது வேறு மேடையொன்றிலோ அமர்ந்து கூட்டத்தில் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த கூட்டத்தில் நாமல் ராஜபக்‌ஷவின் வீடியோ உரையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைது செய்யப்படுவதற்கு முன்னரே நாமல் ராஜபக்‌ஷ குறித்த உரையை பதிவு செய்துள்ளதாகவும், அந்த உரை கூட்டத்தில் வெளியிடப்படவுள்ளதாகவும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நாமல் ராஜபக்‌ஷவின் மனைவி லிமினி ராஜபக்‌ஷ இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் அரசியலுக்குள் நுழையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியுள்ள போதும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் அந்த தகவல்கள் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *