ஜெனிவா கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை தொடர்பான ஆவணம் சமர்ப்பிப்பு

ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் 63ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
சுவிட்லாந்தின் ஜெனிவா நகரில் இன்று முதல் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை 63ஆவது கூட்டத்தொடர் இடம்பெறவுள்ளது.
இன்றைய ஆரம்ப கூட்டத்தொடரில் ஐ.நா மனித உரிமைகள் உயரிஸ்தானிகர் அலுவலகத்தால் இலங்கை தொடர்பான புதுப்பிக்கப்பட்ட எழுத்துமூல ஆவணமொன்று சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதன்போது ஐ.நா. துணைக்குழுவின் அண்மைய இலங்கைக்கான விஜயத்தின்போது அவதானிக்கப்பட்ட பல்வேறு விடயங்கள் உள்ளடங்கலாக பொறுப்புக்கூறல், நீதியை நிலைநாட்டல், நீதிக்கான பொறிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடரில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான குழுவினர் கலந்துகொள்வதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும், இறுதி நேரத்தில் அவர்களின் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஜெனிவாவில் உள்ள இலங்கையின் நிரந்தர இராஜதந்திர தூதுக்குழுவே இந்த அமர்வை முழுமையாகக் கையாளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இங்கு இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள அறிக்கையை மையப்படுத்தி உறுப்பு நாடுகளின் பங்களிப்புடன் கூடிய பொது விவாதமொன்றும் நடைபெறவுள்ளது. குறிப்பாக யாழ். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் உள்ளிட்ட பொறுப்புக்கூறல் விடயங்களை முறையாகக் கையாள்வது குறித்து வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் விரிவான ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
![]()