ராஜபக்சக்களின் அரசாங்கம் இனி சிறைக்குள்தான் அமையும்

ராஜபக்சக்களின் தலைமையிலான அரசாங்கமொன்றை அமைப்பது என்றால் இனிவரும் காலங்களில் ராஜபக்சக்களுக்கு சிறைச்சாலைக்குள் மாத்திரமே அது சாத்தியப்படும் என அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அநுராதபுரத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
அநுராதபுரத்தில் நடைபெறவிருந்த மொட்டுக் கட்சியின் எதிர்ப்புப் பேரணியை குழப்பும் வகையில் நாமல் ராஜபக்சவை அரசாங்கம் கைது செய்துள்ளதாக சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் அவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழவினால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது அவரை விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை நீதிமன்றம் தான் பிறப்பித்திருந்தது, அரசாங்கத்துக்கு அதில் எந்தவொரு தொடர்பும் இல்லை.
அதே போன்று ராஜபக்சர்கள் குறித்து அரசாங்கம் அச்சம் கொண்டிருப்பதன் காரணமாக அவர்களின் கூட்டத்துக்கு அநுராதபுரத்தில் மைதானம் ஒதுக்கவில்லை என்று பரவும் கருத்தும் அடிப்படையற்றது. நாமல் ராஜபக்சவுக்கு எதிரான விசாரணைகள் குறித்து அவர்கள் எப்படியோ மோப்பம் பிடித்துள்ளனர்.அதனை திசை திருப்பும் நோக்கில் திடீரென அநுராதபுர கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.
அத்துடன் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு மைதானங்களை மாத்திரமே அவர்கள் தங்கள் கூட்டத்துக்கு ஒதுக்குமாறு கோரியுள்ளனர். அது முடியாத காரியம். ஏனெனில் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட மைதானங்களை அதே திகதிகளில் வேறொரு விடயத்துக்கு மீண்டும் ஒதுக்க முடியாது. அவர்களுக்குத் தேவையென்றால் அநுராதபுரத்தில் மேலும் 12 பாரிய மைதாளங்கள் இருக்கின்றன .அவற்றில் ஒன்றை ஒதுக்கிக் கொள்ளட்டும். ஆனால் பெரிய மைதானங்களை நாங்கள் கேட்டும் அரசாங்கம் ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து அவர்கள் சிறிய மைதானமொன்றில் தங்கள் கூட்டத்தை நடத்த ஏற்பாடு செய்வதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
ஏனெனில் அவர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்பது அவர்களுக்கே தெரியும். இப்போதைக்கு பொதுமக்கள் அவர்களை ஆதரிக்கப் போவதில்லை.அதே போல ராஜபக்ச குடும்பத்தின் ஆட்சி மீண்டும் இந்த நாட்டில் சாத்தியப்படாது. வேண்டும் என்றால் இந்த நாட்டின் சிறைச்சாலையொன்றில் அவ்வாறான ஆட்சியை அவர்கள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.அதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன . மற்றும்படி பொதுமக்களின் ஆதரவுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்ள அவர்களுக்கு எந்தவொரு வாய்ப்பும் இல்லை என்றார்.
![]()