உலகம்

இந்தியாவின் வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள்! ஒப்பந்தத்துடன் வருகிறார் ராஜ்நாத் சிங்

இலங்கை – இந்தியா இடையே மேற்கொள்ளப்படவுள்ள வான் பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் தற்போது இருதரப்பு இராஜதந்திர ரீதியில் கவனம் பெற்றுள்ளது.

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நாளை செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகும் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையில் அதன் அறிக்கைகள் குறித்த செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்நிலையில் அவரின் விஜயத்தின் முக்கிய நோக்கங்கள் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாதுகாப்புத் துறையுடன் தொடர்புடைய மூன்று புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இதன்போது கைச்சாத்திடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனுடன், கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது கைச்சாத்திடப்பட்ட இந்தியா – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முன்னேற்றம் குறித்தும் இருதரப்பினரும் மீளாய்வு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் ஒன்று இந்தியாவிடமிருந்து வான் பாதுகாப்புத் துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மற்றொரு ஒப்பந்தம் இரு நாடுகளின் மாணவர் படைகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதையும், மூன்றாவது ஒப்பந்தம் இலங்கை பாதுகாப்புக் கல்லூரிக்கும் இந்தியாவின் பாதுகாப்புக் கல்லூரிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

புதன்கிழமை பாதுகாப்புத் துறைக்கு பொறுப்பான ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை ராஜ்நாத் சிங் சந்திக்கவுள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்திற்கு விஜயம் செய்யும் அவர், பிரதமர் ஹரிணி அமரசூரியவையும் சந்திக்கவுள்ளதுடன், நாடாளுமன்ற நடவடிக்கைகளையும் பார்வையிடவுள்ளார்.

அன்றைய தினம் பாதுகாப்புப் படைகளின் பிரதானிகள் குழுவின் (OCDS) அலுவலகத்தை ஒழிப்பது தொடர்பான சட்டமூலம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது விஜயத்தின்போது, இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் ராஜ்நாத் சிங் ஆய்வு செய்யவுள்ளார்.

குறிப்பாக, கடந்த ஆண்டு தித்வா புயலினால் அழிக்கப்பட்ட அல்லது சேதமடைந்த உட்கட்டமைப்புகளை புனரமைப்பதற்காக இந்தியா வழங்கிய 450 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியின் கீழ் முன்னெடுக்கப்படும் திட்டங்கள் தொடர்பிலும் அவர் கவனம் செலுத்தவுள்ளார்.

தித்வா புயலினால் சேதமடைந்த நிலையில், இந்திய உதவியுடன் புனரமைக்கப்பட்ட மூன்று பாலங்களையும் இந்திய பாதுகாப்பு அமைச்சர் காணொளி தொழில்நுட்பத்தின் ஊடாக திறந்து வைக்கவுள்ளார்.

அவற்றில் இரண்டு பாலங்கள் குருநாகல் மாவட்டத்திலும், மற்றைய பாலம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் அமைந்துள்ளன.

மேலும், வியாழக்கிழமை தனது இலங்கை விஜயத்தை நிறைவு செய்து இந்தியாவுக்குத் திரும்புவதற்கு முன்னர், நுவரெலியாவில் உள்ள சீதை அம்மன் ஆலயத்திற்கும் ராஜ்நாத் சிங் விஜயம் செய்யவுள்ளார்.

1989ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் கொழும்புக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது இதுவே முதல் முறையாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *