மன்னார் வைத்தியசாலை மத்திய அரசிடமா?; மன்னார் ஆயரின் கோரிக்கை தவறானதொரு முன்னுதாரணம்; சுரேஷ் பிரேமச்சந்திரன் விசனம்

மன்னார் வைத்தியசாலைக்கு பல குறைபாடுகள் இருக்கும். அந்த குறைபாடுகளை நீக்குவதற்கு, அந்த தேவையான ஆளணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு மறைமாவட்ட ஆயரும், அங்கு இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பொதுஜன அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த வைத்தியசாலையினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, வைத்தியசாலையையே மத்திய அரசாங்கத்திற்கு கொடுப்பது என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிகாரங்களை மீண்டும் ஒப்படைப்பதாகும்.அது மிக மிக தவறான முன்னுதாரணம் என முன்னாள் எம்.பி.யும் ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
அதிகாரப் பகிர்வு தொடர்பாகதமிழ் மக்கள் மத்தியில் சில குழப்பங்கள் இருக்கின்றன . முக்கியமாக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையை மீண்டும் மத்தியிடம் கையளிக்க வேண்டும் என கோரப்படுகிறது.வடக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் போதனா வைத்தியசாலை தவிர்ந்த அனைத்து வைத்தியசாலைகளும் மாகாண ஆட்சிக்கு சொந்தமானது.அந்த விடயங்கள் மாகாண சபைக்கு பகிரப்பட்டிருக்கின்றது.
மன்னார் வைத்தியசாலை மாத்திரமல்ல, சகல வைத்தியசாலைகளிலும் குறைபாடுகள் இருக்கிறது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் குறைபாடு இருக்கிறது, கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் குறைபாடு இருக்கிறது. இலங்கையில் இருக்கக்கூடிய பல்வேறுபட்ட வைத்தியசாலைகளில் பல குறைபாடுகள் இருக்கின்றன. முக்கியமாக ஆளணிப் பற்றாக்குறைகள் நிறையவே இருக்கிறது.மருந்து தட்டுப்பாடுகள் இருக்கிறது.
தேவையான மருந்துகள் இறக்குமதி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு மருத்துவ சங்கத்தினாலேயே முன்வைக்கப்பட்டிருக்கிறது.1500க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் வெளிநாடு சென்றுவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டுகள் இருக்கிறது.
மருத்துவர்களுக்கு தேவையான ஒழுங்குகளை இந்த அரசாங்கம் செய்து கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இவை ஒரு பொதுவான குற்றச்சாட்டுகளாக இலங்கையில் இருக்கிறது.
இந்த நிலையில், மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்திடம் கையளித்து விட்டால் மன்னார் வைத்தியசாலை முன்னேறிவிடும் என்று சிந்திப்பது ஒரு தவறான சிந்தனை.
மன்னார் ஆயரை பொறுத்தவரையில்,மன்னார் வைத்தியசாலையை மத்திய அரசிடம் கையளிக்க வேண்டும் என்று அவர் மீண்டும் மீண்டும் கூறி வருவதானது ஒரு தவறான, பிழையான விடயம்.
தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காகபல்வேறுபட்ட பங்குத் தந்தைகள், பாதிரியார்கள் நிறையவே போராடி இருக்கிறார்கள், உயிர்களையும் கொடுத்திருக்கிறார்கள்.இராஜப்பு ஜோசப் ஆண்டகை,
இந்த விடுதலை யுத்தத்திற்கு பின்னர் ,துணிச்சலாக தமிழ் மக்களுடைய விடுதலைக்கான கருத்தையும் இனப்படுகொலை சம்பந்தமான பல கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருக்கின்றார்.
அவ்வாறான சமூகத்தைச் சேர்ந்த, மன்னார் மறைமாவட்டத்தினுடைய உயரிய இடத்தில் இருக்கக்கூடிய ஆயரானவர், தமிழ் மக்களுடைய பல்வேறு போராட்டங்களின் பின்னர் கிடைத்த அதிகாரங்களை மீண்டும் மத்திக்கு கொடுக்க கூறுவது ஏற்புடைய விடயம் அல்ல. தயவுசெய்து ஆயர் இதனை புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு நாங்கள் தொடர்ந்து சொல்வோமாக இருந்தால், தமிழ் மக்களுக்கு எந்த உரித்தும் எந்த உரிமையும் தேவையில்லை என்ற ஒரு விடயத்தை நாங்கள் சிங்கள அரசாங்கங்களுக்கு சொல்வதாக மாறிவிடும். எங்களுக்கு இப்பொழுது வைத்தியசாலைகள் தேவையில்லை என்று சொல்வது, அடுத்த கட்டமாக பாடசாலைகள் தேவையில்லை என்று சொல்வது, அப்பொழுது எங்களுக்கு என்ன உரிமைகள் தான் தேவை என்ற ஒரு விஷயம் இருக்கின்றது.
மன்னார் வைத்தியசாலைக்கு பல குறைபாடுகள் இருக்கும். ஆகவே அந்த குறைபாடுகளை நீக்குவதற்கு, அந்த தேவையான ஆளணிகளை பெற்றுக் கொடுப்பதற்கு மறைமாவட்ட ஆயரும், அங்கு இருக்கக்கூடிய பல்வேறுபட்ட பொதுஜன அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் , பாராளுமன்ற உறுப்பினர்களும் அந்த வைத்தியசாலையினுடைய தேவைகளை நிறைவேற்றுவதற்கு உதவிகளை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, வைத்தியசாலையையே மத்திய அரசாங்கத்திற்கு கொடுப்பது என்பது தமிழ் மக்களுக்கு கிடைத்த அதிகாரங்களை மீண்டும் ஒப்படைப்பதாகும்.அது மிக மிக தவறான ஒரு முன்னுதாரணம்.
ஆகவே இது கிறிஸ்தவ மக்களுக்கோ ஆயருக்கோ எதிரான ஒரு கருத்து அல்ல. மாறாக, தமிழ் மக்கள் பெற்றுக்கொண்ட உரிமைகளை ஏதோ மத்திய அரசாங்கத்திற்கு கொடுத்துவிட்டால் எல்லாம் பிரச்சனையும் தீர்ந்துவிடும் என்று யோசிப்பது முதல் தவறான ஒரு கருத்துகோள். ஆகவே இதில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். இனிமேலும் இது தொடர்பாக ஒரு தவறான வியாக்கியானங்களை கொண்டு வரக்கூடாது என்பதையே நாங்கள் ஒரு அன்போடும் உரிமையோடும் நாங்கள் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் – என்றார்.
![]()