வட கிழக்கிலுள்ள மனிதப் புதைகுழிகளை அகழ்ந்தெடுப்பதற்கு பொதுக் கட்டமைப்பு; அனைத்துத் தரப்பினதும் ஆதரவு வழங்கக் கோரிக்கை

யாழ் குடாநாட்டிலும் வடக்கு கிழக்கிலும் இருக்கின்ற மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தி, அவற்றை அகழ்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கு தீர்மானித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி வழக்கின் வழக்காளி கிருபாகரன் தெரிவித்தார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1995 ஆம் ஆண்டு இராணுவத்தினர் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய பின்னர், பாரிய அளவிலான காணாமல் போதல் மற்றும் கடத்தப்படுதல், சித்திரவதைப்படுத்தல் மற்றும் படுகொலை செய்தல், கூட்டுப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தல் போன்ற செயல்பாட்டின் ஊடாகப் பல உயிர்கள் மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்டிருக்கின்ற நிலைமையில், அதனை வெளியுலகிற்குக் கொண்டுவந்தது கிருசாந்தியினுடைய படுகொலை.
கிருசாந்தி படுகொலை செய்யப்பட்டு 45 நாட்களுக்குப் பின்னர் அந்த உடல்கள் பொதுமக்களின் தகவலின் பேரில் கண்டுபிடிக்கப்பட்டு, உண்மை வெளியுலகத்திற்கு கொண்டுவரப்பட்டு, சர்வதேச அழுத்தங்கள் ஊடாக நீதி விசாரணை இடம்பெற்றது.
கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட அதே தினத்தில் 30 ஆண்டுகள் கழிந்திருக்கின்ற நிலைமையிலும், இலங்கையினுடைய நீதித்துறை நீதியைத் தராத நிலைமையிலும், செம்மணி மனிதப் புதைகுழிக்கு 27 வருடங்களாக நீதி கிடைக்காத நிலைமையிலும், புதிய அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு இலங்கையினுடைய நீதித்துறை எந்த நீதியையும் தரமாட்டாது என்று மக்கள் கருதுகின்றார்கள்.
கிருசாந்தியினுடைய இந்தத் தினத்தில், நாங்கள் கட்சி பேதம் மறந்து, தமிழ் மக்களாக ஒரு பொதுவான கொள்கைப் திட்டத்தை உருவாக்குவதற்கு இந்த ஏற்பாட்டுக் குழு தீர்மானித்து, அதன் அடிப்படையில் இந்த செம்மணி மனிதப் புதைகுழியின் வழக்குகளை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு பொதுவான சட்டத்தரணிகள் குழாம் ஒன்றை உருவாக்கவுள்ளோம்.
அத்துடன், அரசியல் ஆய்வாளர்களை உள்ளடக்கி, பொதுவான அரசியல் ஆய்வுக்குழுவினையும், தமிழ் தேசியத்துடன் இயங்குகின்ற, தமிழருக்கு இழைக்கப்பட்டது இனவழிப்பு என்பதனை ஏற்றுக்கொண்டு, அதற்கு சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுகின்ற அனைத்து தமிழ் கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பொதுவான செயற்பாட்டுக் குழு ஒன்றையும் உருவாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்துவதற்கான ஒரு செயற்பாட்டுக் குழுவும், அத்துடன் சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மதத் தலைவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவையும் உள்ளடக்கி, ஒரு பொதுவான கட்டமைப்பை உருவாக்கி,செம்மணி மனிதப் புதைகுழியை நாங்கள் சர்வதேச விசாரணையை நோக்கி கொண்டு செல்வதற்கான ஒரு கட்டமைப்பை உருவாக்கவுள்ளோம்.
அதிலும் மிகப்பெரிதான விடயம் என்னவென்றால், யாழ் அரியாலைப் பகுதியில் இருக்கின்ற வேறு மனிதப் புதைகுழியையும் அடையாளப்படுத்துவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு, அதுமட்டுமில்லாமல், யாழ் குடாநாட்டிலும் வடக்கு கிழக்கிலும் இருக்கின்ற மனிதப் புதைகுழிகளை அடையாளப்படுத்தி, அவற்றை அகழ்ந்தெடுப்பதற்கான நடைமுறைகளை உருவாக்குவதற்கான ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவதற்காக நாங்கள் தீர்மானித்துள்ளோம்.
இதற்கான ஆரம்ப நாளாக, கிருசாந்தி படுகொலை செய்யப்பட்ட செப்டம்பர் 7 ஆம் திகதியில் இருந்து, அவருடைய உடல் கண்டெடுத்த 45 நாட்களுக்குள் அந்தப் பொதுவான கட்டமைப்பு உருவாக்குவதற்கான செயற்பாட்டில் இந்த ஏற்பாட்டுக் குழுவும், வழக்காளியாக நானும் இணைந்து செயல்பட உள்ளோம்.
எனவே, அந்த ஏற்பாட்டின் அடிப்படையில் இந்த மனிதப் புதைகுழிகளின் உண்மைகளை வெளியே கொண்டுவந்து, அதன் ஊடாக இலங்கையினுடைய நீதித்துறை இதுவரை நீதி தரவில்லை என்பதை உரத்துக் கூறி, மிக முக்கியமாக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் இதில் பிரதான பங்கினை வகித்து, அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த ஏற்பாட்டை செய்யவுள்ளோம்.
எனவே தமிழ் அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள், வைத்தியத் துறையைச் சேர்ந்தவர்கள், தொல்லியல் அகழ்வுடன் தொடர்புபட்டவர்கள், சிவில் சமூகங்கள், மதத் தலைவர்கள் அனைவரும் எம்முடைய அழைப்புகளை ஏற்று, அந்த ஒருமுகப்படுத்தப்பட்ட ஒரு குழுவை அமைப்பதற்கும், அந்தக் குழுவின் ஊடாக இந்த மனிதப் புதைகுழிக்கான தீர்வுப் பொறிமுறையை உருவாக்குவதற்கான செயற்பாட்டையும் பங்களிப்பு செய்யவேண்டும்.
செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் முதலாம் கட்ட, இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட அகழ்வில் ஊடகவியலாளர்கள் மிகவும் நேர்த்தியாக ஆவணப்படுத்தலை மேற்கொண்டிருந்தார்கள். அவர்களையும் ஒழுங்கமைத்து, அந்த ஊடகவியலாளர் ஊடாக வெளியே கொண்டுவரக்கூடிய சாட்சியங்களையும், வெளியே முகம் காட்ட விரும்பாத மக்களுடைய நேரடி, அந்த மனிதப் புதைகுழியில் இருந்து தப்பியவர்களுடைய சாட்சியங்களையும் ஆவணப்படுத்த நாங்கள் எண்ணி இருக்கின்றோம்.
பல சாட்சியங்கள் இறக்கின்றார்கள். அண்மையில், ஒரு மாதத்திற்கு முன்னரும் அரியாலைப் பகுதியில் தன்னுடைய மகனை காணாமற்போன கண்கண்ட சாட்சியான தாய் கமலநாயகி என்பவர் அமரத்துவம் அடைந்துவிட்டார். எனவே சாட்சியங்கள் அழிக்கப்படுகின்றன, மறைக்கப்படுகின்றன. அவற்றை ஒழுங்கமைக்கப்பட்ட, சட்டரீதிக்கு உட்பட்ட ரீதியில் அவற்றை ஆவணப்படுத்துவதற்கான நடவடிக்கையும் ஒருமுகப்படுத்தப்பட்ட ரீதியில் நாங்கள் செய்ய இருக்கின்றோம்.
அனைத்துத் தரப்பும் ஒத்துழைப்பைத் தர வேண்டும் , பங்காளியாக மாறுங்கள். இங்கே இழைக்கப்பட்ட தமிழருக்கான அநீதிக்கு ஒரு சர்வதேச விசாரணையைக்கோருவோம் – என்றார்.
![]()