வல்லரசு மோதல்களின் பகடைக்காயாக மாறக்கூடாது; சர்வதேச மோதல்களில் இலங்கை சிக்கக்கூடாது என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி எச்சரிக்கை

இலங்கையுடன் இணைந்து செயற்படுமாறு நேட்டோவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பை வன்மையாகக் கண்டிப்பதுடன் அரசாங்கத்தின் இந்த புதிய போக்கு வெட்கக்கேடானது எனவும் சர்வதேச மோதல்களில் இலங்கை சிக்கிவிடும் ஆபத்து இருப்பதாகவும் சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் வைத்திய நிபுணர் ஜீ.வீரசிங்க விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கனடாவில் நடைபெற்ற பாதுகாப்புத் தலைவர்கள் மாநாட்டிற்கிடையே, பாதுகாப்புச் செயலாளர் சம்பத் துய்யகொந்தா, நேட்டோ இராணுவக் குழுவின் தலைவர் அட்மிரல் கியூசெப் கேவோ டிராகன் மற்றும் உயர் அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாதுகாப்பு அமைச்சு செப்டம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சந்திப்பில் இராணுவப் பரிமாற்றங்கள், தொழில்நுட்பப் பகிர்வு மற்றும் சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் விவாதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் இந்த முன்னெடுப்புகள் இலங்கையின் நீண்டகால பாரம்பரிய வெளியுறவுக் கொள்கையான அணிசேரா கொள்கையை மீறும் ஆபத்தான போக்காகும். இலங்கை அட்லாண்டிக் பெருங்கடல் பிராந்தியத்தில் அமையவில்லை என்பதால், நேட்டோவின் பாதுகாப்பு இலக்குகள் இலங்கைக்கு பொருந்தாது.
நேட்டோ என்பது ஏகாதிபத்திய நலன்களைப் பாதுகாக்கும் ஒரு ஆக்கிரமிப்பு சகாப்தக் கூட்டமைப்பாகும். யூகோஸ்லாவியா, ஆப்கானிஸ்தான் மற்றும் லிபியா போன்ற நாடுகளில் அது மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்களை உலகறியும்.
இலங்கைக்கு அருகில் உள்ள டியாகோகாசிய தீவில் உள்ள அமெரிக்க தற்காப்புத் தளம் ஏற்கனவே பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தகையதொரு அமைப்போடு கைகோர்ப்பது நாட்டின் நடுநிலைத்தன்மைக்கு அச்சுறுத்தலாகும்.
அதனால் இலங்கை உலகளாவிய வல்லரசு மோதல்களின் பகடைக்காயாக மாறக்கூடாது. இந்தியாவின் பெருங்கடல் பிராந்தியத்தில் அமைதியான சகவாழ்வையே நாடு கோர வேண்டுமே தவிர, சர்வதேச மோதல்களில் சிக்கக்கூடாது.
எனவே நேட்டோவுடன் மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தைகளின் தன்மை மற்றும் நோக்கம் குறித்து அரசாங்கம் உடனடியாகத் தெளிவுபடுத்த வேண்டும். வெளிநாட்டு இராணுவ உடன்படிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை கடைபிடிக்கப்பட வேண்டும். நாட்டின் தேசிய இறையாண்மையை விட்டுக் கொடுக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் எதிராக மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சிறிலங்கா கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கிறது.
இலங்கையின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் அணிசேராக் கொள்கைக்கு ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ச்சியாக எதிர்க்கும் .
![]()