உலகம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்க புதிய விதி; டிரம்ப் நிர்வாகம் திட்டம்

அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு பாஸ்போர்ட் வழங்கும்போது, அவர்களின் பெற்றோர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள் என்பதற்கான ஆவணங்களை கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நடைமுறையை கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இரண்டாவது முறையாக பதவியேற்றதன் பின்னர், குடியேற்றம் மற்றும் விசா தொடர்பான விதிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த புதிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போதைய நடைமுறையின்படி, அமெரிக்காவில் பிறந்த குழந்தைக்கு பாஸ்போர்ட் பெறும்போது, பெற்றோர் குழந்தையுடனான உறவை நிரூபிக்கும் ஆவணங்களையும், புகைப்பட அடையாள அட்டையையும் சமர்ப்பித்தால் போதுமானதாக உள்ளது.

எனினும், புதிய திட்டம் நடைமுறைக்கு வந்தால், பெற்றோர் தங்களது அமெரிக்க குடியுரிமைக்கான ஆதாரத்தையும் கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

அமெரிக்க அரசியலமைப்பின் 14ஆவது சட்டத்திருத்தத்தின் கீழ், அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது நீண்டகாலமாக நிலவி வரும் அரசியலமைப்பு உரிமையாகக் கருதப்படுகிறது.

இந்த நிலையில், பிறப்பு குடியுரிமையை கட்டுப்படுத்தும் வகையில் டிரம்ப் நிர்வாகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு எதிராக பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டால், அமெரிக்காவில் பிறந்த குழந்தைகளின் பாஸ்போர்ட் விண்ணப்ப நடைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *