இலங்கை

22 ஐ மீளப் பெறுமாறு வலியுறுத்தி கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்

நீதியரசர்கள் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று வியாழக்கிழமை கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி உறுப்பினர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் மற்றும் கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பெருமளவிலானோர் கலந்துகொண்டிருந்தனர்.

‘நீதித்துறை சுயாதீனத்தில் கை வைக்காதே’, ‘சட்டவாட்சியை சீர்குலைக்காதே’, 22ஆவது ‘திருத்தத்தை வாபஸ் பெற்றுக்கொள்’ போன்ற கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு கோசங்களை எழுப்பி இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷடி சில்வா ஊடங்களுக்கு கூறுகையில்,

இதற்கு முன்னர் பலர் நீதித்துறையில் கைவைத்து தமது கைகளை சுட்டுக்கொண்டனர் என்பதனை நினைவில் கொள்ளுங்கள். தமது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியும், மூன்றில் இரண்டு அதிகாரத்தை பயன்படுத்தியும் நீதித்துறையில் கைவைத்தமையினால் இறுதியில் வீட்டுக்கு சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்விடத்தில் நாங்கள் அப்போது ஜே.வி.பியுடன் இணைந்து நீதித்துறை பாதுகாக்க போராட்டம் நடத்தினோம் என்பதனையும் நினைவுபடுத்துகின்றோம் என்றார்.

இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் ஊடகங்களுக்கு கூறுகையில்,

இந்த நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக தொழில்நிபுணர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் இந்த அரசாங்கத்திற்கு உதவினர். ஆனால் இன்று இந்த அரசாங்கத்தின் செயற்பாடுகளால் அவர்கள் விலகிச் செல்கின்றனர். 22ஆவது திருத்தம் மூலம் அரசாங்கம் நீதித்துறையை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்பதாகவே தெரிகின்றது. இதற்கு இடமளிக்க முடியாது என்றார்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *