உலகம்

“போர் இழப்பு குறித்து சர்ச்சை கருத்து” – மன்னிப்பு கோரினார் அமெரிக்க வர்த்தகச் செயலாளர்

ஈரான் போரில் அமெரிக்கர்கள் எவரும் உயிரிழக்கவில்லை என்று கூறிய கூற்றுக்கு அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லூட்னிக் (Howard Lutnick) மன்னிப்புக் கோரியுள்ளார்.

போரில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதை ஒப்புக்கொண்ட அவர், வெனிசுவேலா மீதான ராணுவ நடவடிக்கையை நினைவில் கொண்டு அவ்வாறு தவறாகக் கூறிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.

இது குறித்து எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள லூட்னிக்:

“நான் தவறாகக் கூறிவிட்டேன். நமது ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், அவர்களின் இழப்புக்கு மிகவும் வருந்துகிறேன்.

வீரர்கள் எவரும் உயிரிழக்காத வெனிசுவேலா ராணுவ நடவடிக்கை குறித்தே நான் யோசித்துக்கொண்டிருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக புதன்கிழமை CNBC நாளிதழுக்கு அளித்த நேர்காணலின் போது லூட்னிக் இந்த சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அச்சமயம் வெனிசுவேலா குறித்து எந்த விவாதமும் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஈரான் விவகாரத்தில் ஜனாதிபதிசெயல்படும் விதம் சரியானது… அதில் அமெரிக்கர்கள் எவரும் உயிரிழக்கவில்லை. இது வெறும் பொருளாதார நெருக்கடி மட்டுமே.

அரசாங்கம் இதனை மிக விரிவாகச் செயல்படுத்துகிறது, இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று அவர் சிஎன்பிசியிடம் கூறியிருந்தார்.

லூட்னிக் மன்னிப்புக்கோருவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) தளத்தில் லூட்னிக்கிற்கு ஆதரவாகப் பதிவிட்டிருந்தார்.

“யாரும் கொல்லப்படவில்லை என்று கூறியபோது லூட்னிக்கின் நினைவில் வெனிசுவேலாவே இருந்துள்ளது. ஈரானில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்!” என்று ட்ரம்ப் பதிவிட்டிருந்தார்.

இதுவரை கிடைத்துள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ஈரான் மோதலில் 18 அமெரிக்க ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதுடன், 750-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button