22ஆவது திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற 2/3 போதுமானது,சர்வஜன வாக்கெடுப்பு வேண்டாம்; அரச தரப்பு சட்டத்தரணிகள் உயர் நீதிமன்றத்தில் வலியுறுத்து

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கான சட்டமூலம் முறையாக சட்ட வரையறைக்கு உட்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதால் இதனை நிறைவேற்ற பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒப்புதல் மட்டுமே போதுமானது என்றும், இதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்றது என்றும் அரசாங்க தரப்பு சட்டத்தரணிகள் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கான சட்டமூலம் தொடர்பான மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக உயர்நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நடைபெற்ற போது, அரசாங்கம் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான நைஜல் ஹெட்ச் மற்றும் மொகான் வீரகோன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழுவினர், மேற்கண்டவாறு நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்களின் ஓய்வு பெறும் வயதைஅதிகரிப்பதற்காக அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் கடந்த 18ஆம் திகதி முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்தை சவாலுக்கு உட்படுத்தி மனுக்களை தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நேற்று முன்தினம் திங்கட்கிழமையுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, அந்த மனுக்கள் மீதான பரிசீலனைகள் பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையில் அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட ஐவர் அடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு வரை இடம் பெற்றது.
இதனை தொடர்ந்து நேற்று புதன்கிழமை இரண்டாவது நாளாக மனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அரசாங்கம் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான நைஜல் ஹட்ச் மற்றும் மொகான் வீரகோன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழு ஆஜராகி தமது தரப்பு வாதங்களை முன்வைத்தது.
இதன்போது அவர்கள் கூறுகையில், இந்த அரசியலமைப்பு திருத்தமானது அரசியலமைப்பு சட்டக்கட்டமைப்பிற்குட்பட்டே உள்ளது. இதனால் இதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஒப்புதல் மட்டுமே போதுமானது. இதனை நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியமற்றது என்று குறிப்பிட்டு இதுபோன்ற சட்டமூலங்கள் தொடர்பான கடந்த கால சட்ட அறிக்கைகள், நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சர்வதேச முன்னுதாரணங்களை மேற்கோள் காட்டி தமது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.
நேற்றைய தினமும் பெருமளவிலான சட்டத்தரணிகள் மனுதாரர்கள் சார்பாகக ஆஜராகி தமது வாதங்களை முன்வைத்ததுடன், அவை நேற்று இரவு வரையிலும் தொடர்ந்தது.
![]()