உலகம்

ஜெர்மனியுடன் ட்ரோன் ஒப்பந்தம் கைச்சாத்திடுகிறது உக்ரைன்

உக்ரைன், ஜெர்மனியுடன் இணைந்து ட்ரோன் உற்பத்தி தொடர்பான முக்கிய ஒப்பந்தமொன்றை இறுதி செய்து வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ஜெர்மன் ஜனாதிபதி ப்ரீட்ரிச் மெர்ஸ் உடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு உக்ரைனால் முன்மொழியப்பட்ட இந்த ஒப்பந்தத்தின் மூலம், பல்வேறு வகையான ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய மென்பொருட்களை இரு நாடுகளும் இணைந்து உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

“எங்கள் குழுக்கள் ஏற்கனவே ட்ரோன் ஒப்பந்தத்தின் உரையை இறுதி செய்து வருகின்றன. இது ஜெர்மனி மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு திறன்களை நிச்சயமாக வழங்கும்” என ஸெலென்ஸ்கி தனது டெலிகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஷாஹெட் (Shahed) ரக தாக்குதல் ட்ரோன்களை எதிர்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்ட 15,000 ‘ஸ்ட்ரிலா’ (Strila) ரக இடைமறிப்பு ட்ரோன்களை கிய்வ் நகருக்கு வழங்குவதற்கான பல மில்லியன் யூரோ மதிப்பிலான திட்டம் உட்பட, ஏற்கனவே உள்ள ஜெர்மன்-உக்ரைனிய பாதுகாப்பு கூட்டுறவை மேலும் வலுப்படுத்துவதாக இந்த ஒப்பந்தம் அமையும்.

கடந்த ஏப்ரல் மாதம், ஜெர்மன் பாதுகாப்பு தொழில்நுட்ப நிறுவனமான குவாண்டம் சிஸ்டம்ஸ் மற்றும் உக்ரைனின் ‘WIY Drones’ தயாரிப்பு நிறுவனம் ஆகியன இணைந்து ‘Quantum WIY Industries’ என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கின.

இடைமறிப்பு ட்ரோன்கள் மற்றும் வான் பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்நிறுவனம் தொடங்கப்பட்டது.

மேலும், உக்ரைனிய உற்பத்தியாளரான ஸ்கைஃபோல் (SkyFall) தயாரிக்கும் 50,000 ‘ஷ்ரைக்’ (Shrike) ரக தாக்குதல் ட்ரோன்களுக்கான நிதியுதவியை ஜெர்மனி வழங்கி வருகிறது. மேற்கத்திய அரசாங்கமொன்றினால் உக்ரைனுக்காக மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ட்ரோன் கொள்முதல்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.

இதேவேளை, எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ள ஸெலென்ஸ்கி, தானும் அதிபர் மெர்ஸும் இந்த ட்ரோன் ஒப்பந்தம், புதிய ஜெர்மன் வான் பாதுகாப்பு ஆதரவு மற்றும் இருதரப்பு நேரில் சந்திக்கும் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button