இந்தியா

போரை முடிவுக்கு கொண்டுவருமாறு புடினிடம் மோடி கோரிக்கை

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் மனிதநேயத்தின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், போரை நிறுத்துவதற்கான அனைத்து அமைதி முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவளிக்கும் என்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ (SCO) உச்சி மாநாட்டின் இடையே, ஜனாதிபதி புடினுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் தொடக்கத்தில் பிரதமர் மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியதற்காக மேலைநாடுகள் பல தடைகளை விதித்த போதிலும், ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளாக இந்தியாவும் சீனாவும் விளங்கி வருகின்றன.

கிரெம்ளின் மாளிகை வெளியிட்ட சந்திப்பின் உரையாடல் விவரங்களின்படி, பிரதமர் மோடி புடினிடம் பேசுகையில்,

“அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் இந்தியா ஆதரிக்கிறது; எதிர்காலத்திலும் இதைத் தொடர்வோம். போர் நீடிக்கும் ஒவ்வொரு நாளும் மனிதநேயம் ஒரு படி பின்நோக்கிச் செல்கிறது.

ஆனால் அமைதியை நோக்கிய ஒவ்வொரு அடியும் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் உண்மையான நம்பிக்கையைத் தருகிறது. நாம் முடிவில்லாத போரிலிருந்து போரை நிறுத்துவதை நோக்கி நகர வேண்டும். அதற்கான திசையிலேயே நாம் பயணிக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்த அதிபர் புடின், இந்தியப் பிரதமருக்கு நன்றி தெரிவித்ததுடன் “நாமும் அந்தப் பாதையிலேயே முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்” எனக் கூறினார்.

எனினும், தன் நிபந்தனைகளுக்கு உடன்பட்டால் மட்டுமே போரை நிறுத்த முடியும் என ரஷ்யா தொடர்ந்து கூறி வருகிறது. இதனிடையே, உக்ரைன் போர் தொடர்பான ராணுவ நடவடிக்கைகளின் தற்போதைய நிலை குறித்து ஜனாதிபதி புடின், பிரதமர் மோடிக்கு விளக்கமளித்ததாக TASS செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button