செம்மணி மனிதப் புதைகுழிக்கு சர்வதேச நீதி கோரி யாழில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி

செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரும் நீதியின் ஓலம்- 2 தொடர் போராட்டத்தின் இறுதிநாளான நேற்றுத் திங்கட்கிழமை தாயகச் செயலணி அமைப்பினரின் ஏற்பாட்டில் யாழில் மாபெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (14) மாலை-04 மணியளவில் நீதியின் ஓலம்-2 தொடர் போராட்டம் யாழ். செம்மணி வளைவுப் பகுதியில் ஆரம்பமாகியிருந்தது.இந் நிலையில் போராட்டத்தின் இறுதி நாளான நேற்றைய தினம் காலை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திலிருந்து ஆரம்பமான மாபெரும் பேரணி யாழ்ப்பாணம் பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தை அடைந்து அங்கிருந்து ஆஸ்பத்திரி வீதி ஊடாக கோவில் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தைப் பேரணிசென்றடைந்தது. தொடர்ந்து அங்கும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து செம்மணி மனிதப் புதைகுழி உட்படக் கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான விவகாரம் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு நீதியும் பொறுப்புக்கூறலும் வழங்கப்பட வேண்டும் எனவும், சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தி ஐக்கியநாடுகள் சபையின் அலுவலகப் பிரதிநிதிகளிடம் கோரிக்கைகளடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது.
மேற்படி மாபெரும் பேரணி, ஆர்ப்பாட்டத்தில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இந்து, கிறிஸ்தவ மதகுருமார்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சிவில்- சமூகப் பிரதிநிதிகள், தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், துரைராசா ரவிகரன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், மக்கள் போராட்ட முன்னணியின் முக்கியஸ்தர் ராஜ்குமார் ராஜீவ்காந், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், கரைச்சிப் பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன், முன்னாள் வடக்கு மாகாணக் கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன், புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
![]()