பொலனறுவை மேல் நீதிமன்றத்தில் பிள்ளையான் உட்பட நால்வருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) உட்பட 4 பேருக்கு எதிராக பொலனறுவை மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்ரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பேராசிரியர் ரவீந்திரநாத் 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கொழும்பில் நடைபெற்ற அறிவியல் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு திரும்பியபோது கடத்தப்பட்டார்.இதையடுத்து ஆட்கடத்தல், சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் மற்றும் கொலைச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட நீண்டகால விசாரணைகளின் அடிப்படையில் திரட்டப்பட்ட சாட்சியங்களைக் கொண்டு சட்டமா அதிபரால் இந்த குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற அழைப்பாணைகள் குறித்த விவரங்கள் பொலனறுவை மேல் நீதிமன்றத்தின் அடுத்தகட்ட உத்தரவுகளின் அடிப்படையில் அறிவிக்கப்படும்.
![]()