இலங்கை

ஆசியாவின் மிகப்பெரிய மனிதப் புதைகுழியாக மாறும் செம்மணி சர்வதேசத்தின் கவனத்தை திருப்ப வேண்டும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் மற்றும் தமிழர் புலம்பெயர் அமைப்புகள் இணைந்து சர்வதேச ரீதியாக அழுத்தத்தைக் கொடுத்து அதன் ஊடாக செம்மணி அகழ்வாய்வுப் பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்திருந்தார். நீதியின் ஓலம் 2 போராட்ட களத்திற்கு வருகை தந்து கருத்து தெரிவித்தபோதே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

வருகின்ற 19ஆம் திகதியோடு (புதன்கிழமை) செம்மணி அகழ்வுப் பணிகள் நிறுத்தப்படவுள்ளன. அடுத்து வரும் மாதங்கள் மழைக்காலமாக இருப்பதால் ஆய்வுகள் நிறுத்தப்பட்டால், அடுத்த ஆண்டுதான் ஆய்வுகளுக்கான வழிமுறைகளைத் தேட வேண்டி இருக்கும். எனவே சர்வதேச அமைப்புகள், புலம்பெயர் உறவுகள், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம் ஆகியவை இணைந்து அழுத்தத்தைக் கொடுத்துத் தொடர்ச்சியாக இந்த அகழ்வாய்வுப் பணிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த இடத்திலே பல நூற்றுக்கணக்கான தமிழ் மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இளைஞர்கள், யுவதிகள், சிறுவர்கள், வயோதிபர்கள் என்ற பாகுபாடின்றி 550க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இடமாகவும், ஆசியாவின் மிகப்பெரிய மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட இரண்டாவது மிகப்பெரிய மனித புதைகுழியாகவும் செம்மணி அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த இடத்திலே எமது தமிழ் மக்கள் கொத்து கொத்தாகக் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் என்பதை இந்த செயற்பாடு உணர்த்திக்காட்டுகின்றது. இந்து மயானத்தில் சம்பிரதாய முறைகளோடு அடக்கம் செய்யப்படாமல், திசைகள் மாற்றியும், எந்தவிதமான ஆடைகளும் இன்றியும் அடித்தும் சித்திரவதை செய்யப்பட்ட நிலையிலும் பலருடைய எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளில் 50 சதவீதமானவை குழந்தைகளுடையனதாகவும், சிறுவர்களுடையதாகவும் காணப்படுகின்றன. இது கொடூரமான முறையில் சிங்கள இராணுவத்தாலும் படைகளாலும் செய்யப்பட்ட மனித படுகொலை என்பதனை எடுத்துக்காட்டுகின்றது.

இந்த செயற்பாட்டை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதற்கு சர்வதேச அழுத்தம் மற்றும் சர்வதேச சமூகம் ஆகியவற்றின் மேற்பார்வை அவசியமாகக் காணப்படுகின்றது. அதனை வலியுறுத்தியே தாயகச் செயலணி தமிழர்களை ஒரு தரப்பாக ஒருங்கிணைத்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றார்கள். இந்த கூட்டு முயற்சிக்கு அனைத்து மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும். செம்மணியினுடைய அடித்தளம் உலகம் வரை செல்ல வேண்டும் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button